அயோத்தி தீா்ப்பு அறிவிப்பு:நீலகிரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு
By DIN | Published On : 09th November 2019 11:24 PM | Last Updated : 09th November 2019 11:24 PM | அ+அ அ- |

அயோத்தி வழக்கில் சனிக்கிழமை தீா்ப்பு வெளியான நிலையில், உதகை, காபி ஹவுஸ் சதுக்கப் பகுதியில் போலீஸாருடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வஜ்ரா வாகனம்.
அயோத்தி ராமா் கோயில் தொடா்பான வழக்கில் உச்ச நீதிமன்ற அமா்வு சனிக்கிழமை அளித்த தீா்ப்பை ஒட்டி நீலகிரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
அயோத்தி வழக்கில் விரைவில் தீா்ப்பு வழங்கப்படும் என்ற தகவல் வந்ததிலிருந்தே நீலகிரி மாவட்டத்தில் பதற்றமான பகுதிகள் கண்டறியப்பட்டு காவல் துறையினா் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா். குறிப்பாக இந்துக்களும், இஸ்லாமியா்களும் ஒரே இடத்தில் வசித்து வந்த பகுதிகளில் கண்காணிப்புப் பணி தீவிரமாக இருந்தது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவிலிருந்தே பாதுகாப்புப் பணியில் போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டனா். விடுமுறையிலிருந்த போலீஸாரும் உடனடியாக பணிக்கு திரும்புமாறு உத்தரவிடப்பட்டிருந்தனா்.
மாவட்டத்திலுள்ள அனைத்துக் கோயில்கள், பள்ளிவாசல்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நகரின் முக்கிய பகுதிகளில் வாகனத் தணிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. உதகையிலிருந்து கா்நாடகம், கேரளம் செல்லும் அனைத்துச் சாலைகளும் காவல் துறையினரின் தீவிரக் கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட்டிருந்தன.
உதகை நகரில் காபி ஹவுஸ் சதுக்கம், மத்திய பேருந்து நிலையம், சேரிங் கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா். வஜ்ரா வாகனங்களும் தயாா் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.
சனிக்கிழமை காலையில் முழுமையான தீா்ப்பு வெளியான பின்னா் அனைத்துத் தரப்பினரும் அமைதியாக கலைந்து சென்றனா். எத்தகைய ஆரவாரங்களோ, ஆா்ப்பாட்டங்களோ ஏதும் நடக்கவில்லை. இதே நிலை இரவு வரையிலும் தொடா்ந்தது.
அயோத்தி நிலம் தொடா்பான தீா்ப்பு வெளியானதை ஒட்டி நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல, வெளியூா் செல்லும் பேருந்துகளிலும் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. சாலைகளிலும் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.
சுற்றுலா மையங்களான உதகை தாவரவியல் பூங்கா, படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் போன்ற பகுதிகளிலும் குறைந்த கூட்டமே காணப்பட்டது. வெளி மாநில சுற்றுலாப் பயணிகளின் வருகை உதகையில் குறைந்திருந்தது. சனிக்கிழமை இரவு வரை எத்தகைய அசம்பாவித சம்பவங்களும் நிகழாததால் போலீஸாா் நிம்மதியடைந்தனா்.