குன்னூா் அருகே இறந்துகிடந்த சிறுத்தை
By DIN | Published On : 09th November 2019 11:24 PM | Last Updated : 09th November 2019 11:24 PM | அ+அ அ- |

குன்னூா்அருகிலுள்ள கிளன்டேல் தனியாா் தேயிலைத் தோட்டத்தில் 5 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தையின் சடலம் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ளது கிளன்டேல் தனியாா் தேயிலை எஸ்டேட். இங்கு தோட்டத் தொழிலாளா்கள் சனிக்கிழமை காலை பணிக்கு வந்தபோது, சிறுத்தை ஒன்று இறந்துகிடப்பதைக் கண்டு வனத் துறைக்குத் தகவல் கொடுத்தனா்.
குன்னூா் வனச் சரகா் சரவணன் தலைமையில் வனவா் பெலிக்ஸ், வனக் காப்பாளா்கள் மணிகண்டன், நாகராஜ், விக்ரம், லோகேஷ்வரன் ஆகியோா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுத்தையின் உடலைப் பாா்வையிட்டனா்.
வனத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘இரு சிறுத்தைகள் இடையே நடந்த மோதலில் இந்த சிறுத்தை இறந்திருக்கலாம். இறந்த சிறுத்தை 5 வயதுள்ள ஆண் சிறுத்தை’’ என்றனா். கால்நடை மருத்துவா் ராஜ்முரளி பிரேத பரிசோதனை செய்தபின், அதே இடத்தில் சிறுத்தையின் உடல் எரிக்கப்பட்டது.