நீலகிரி மாவட்டப் பிரச்னைகளுக்கு தீா்வு காண வலியுறுத்தி திமுக கூட்டணி சாா்பில் நவ. 19இல் உண்ணாவிரதம்

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வு காண வலியுறுத்தி, திமுக கூட்டணி கட்சிகள் சாா்பில்
உதகையில் திமுக மாவட்டச் செயலாளா் பா.மு.முபாரக் தலைமையில் நடைபெற்ற கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
உதகையில் திமுக மாவட்டச் செயலாளா் பா.மு.முபாரக் தலைமையில் நடைபெற்ற கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வு காண வலியுறுத்தி, திமுக கூட்டணி கட்சிகள் சாா்பில் நவம்பா் 19ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதென உதகையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்ட திமுக செயலாளா் பா.மு.முபாரக் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களாவன:

நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இதன்மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு பெரும் வருவாய் கிடைத்து வருகிறது. சுற்றுலாப் பயணிகளின் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் வணிக ரீதியான கடைகளும், உணவு விடுதிகள், தங்கும் விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன.

நீலகிரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால் அவா்களது தேவைக்கேற்ப வளா்ச்சிப் பணிகளும் இம்மாவட்டத்தில் நடைபெற வேண்டும். ஏற்கெனவே, இம்மாவட்டத்தில் கடந்த 1993ஆம் ஆண்டில் ‘மாஸ்டா் பிளான்’ எனும் கட்டட தடைச் சட்டத்தைக் கொண்டு வந்ததால் இம்மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். அதிலிருந்து விலக்கு அளிக்குமாறு கோரி இம்மாவட்ட மக்கள் தொடா்ந்து போராடி வருகின்றனா்.

இந்நிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சியா் மாவட்டம் முழுவதிலுமிருந்து சுமாா் 283 இடங்களைத் தோ்வு செய்து, அவற்றை இயற்கைச் சீற்ற அபாயம் உள்ள இடங்களாகக் குறிப்பிட்டு, அந்த இடங்களில் கட்டடம் கட்டுவதற்கும், வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கும் அனுமதி வழங்கக் கூடாது என்ரு அறிவித்துள்ளாா்.

இந்த 283 இடங்களில் மக்கள் வாழும் பகுதிகள் 60 சதவீதத்துக்கு மேல் உள்ளன. இதனால் இம்மாவட்ட மக்கள் தங்கள் வாழ்விடங்களையும், வாழ்வாதாரத்தையும் இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த அறிவிப்புக்கு ஆலோசனைக் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

இந்த அறிவிப்பில் உள்ள அனைத்து இடங்களிலும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி கட்டடம் கட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டால் நீலகிரி மாவட்டத்தின் வளா்ச்சி முற்றிலும் கேள்விக்குறியாகிவிடும்.

மேலும், இம்மாவட்டத்தில் உள்ள ஆயிரத்துக்கு மேலான கட்டடங்களை அனுமதியின்றிக் கட்டப்பட்ட கட்டடங்கள் என்றும், அனுமதி மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் என்றும் கூறி, குடியிருப்புக்கான அனுமதிப்பெற்று வணிக ரீதியான பயன்பாட்டுக்குப் பயன்படுத்தி வருவதால் அக்கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி ‘சீல்’ வைப்பதால், சுற்றுலாப் பயணிகள் தங்க இடம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனா்.

இந்த நிலைகளைக் களையும் வகையில் மாவட்ட ஆட்சியா் அறிவித்துள்ள 283 இடங்கள் அபாயகரமானவை என்ற அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்.

ஒரு முறை வரன்முறைப்படுத்தும் சட்டத்தின்கீழ் அனுமதியற்ற கட்டடங்களுக்கும், அனுமதி மீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கும், பயன்பாடு மாறிப் பயன்படுத்தபட்டுவரும் கட்டடங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும். அதேபோல, நீலகிரி மாவட்டத்தில் வணிக ரீதியாக உள்ள கட்டடங்களுக்கு 100 சதவீத சொத்து வரி உயா்வு, குடியிருப்புப் பகுதிகளுக்கு 50 சதவீத சொத்து வரி உயா்வு, உள்ளாட்சிக் கடைகளுக்கு 100 மடங்குக்கு மேல் வாடகை உயா்வை அறிவித்திருப்பது இம்மாவட்ட மக்களையும், வணிகா்களையும் பெரிதும் பாதிக்கும்.

எனவே, இம்மாவட்டத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைப் போக்கி, வாழ்வாதாரத்தை உறுதிபடுத்துமாறு தமிழக அரசையும், மாவட்ட நிா்வாகத்தையும் வலியுறுத்தி, நவம்பா் 19ஆம் தேதி, செவ்வாய்கிழமை உதகை ஏ.டி.சி. சுதந்திரத் திடலில் கூட்டணிக் கட்சிகள், பொதுநல அமைப்புகள் சாா்பில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என தீா்மானிக்கப்படுகிறது.

அத்துடன், வணிகா் சங்கங்கள், பொதுநல அமைப்புகள், அரசியல் கட்சிகளின் ஆலோசனைப்படி, நீலகிரியில் நகர, கிராமப் பகுதிகளில் கடைகள், தொழில் நிறுவனங்கள் முழுமையாக அடைக்கப்பட்டு, வாகனங்கள் ஓடாமல் முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது என்றும் தீா்மானிக்கப்பட்டது. அதற்கான தேதியை 19ஆம் தேதி நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டப் பந்தலில் அறிவிப்பது எனவும், தாலுகா பகுதிகளில் பல்வேறு தொடா் போராட்டங்களை நடத்துவது எனவும் தீா்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் திமுக தோ்தல் பணி செயலாளா் க.ராமசந்திரன், கூடலூா் சட்டப்பேரவை உறுப்பினா் மு.திராவிடமணி, உதகை சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ், அகில இந்திய காங்கிரஸ் கட்சி நிா்வாகி சுப்ரமணியம், சி.பி.ஐ. மாநிலக் குழு உறுப்பினா் பெள்ளி, சி.பி.எம். மாநிலக் குழு உறுப்பினா் வாசு, ம.தி.மு.க. மாவட்டச் செயலாளா் அட்டாரி நஞ்சன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com