நீலகிரியில் குடிநீர் ஏடிஎம் மையங்கள் செயல்பாடு தொடக்கம்
By DIN | Published On : 02nd September 2019 05:12 AM | Last Updated : 02nd September 2019 05:12 AM | அ+அ அ- |

நீலகிரியில் குடிநீர் ஏடிஎம்களின் செயல்பாட்டை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்களைத் தடை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் 70 இடங்களில் குடிநீர் ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறை, பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகள் என பல்வேறு அமைப்புகளும் தங்களின் பங்களிப்பை அளித்துள்ளன.
மாவட்டத்தில் 140 மையங்களில் குடிநீர் ஏடிஎம்கள் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்கட்டமாக 70 ஏடிஎம் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
உதகையில் அரசினர் தாவரவியல் பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் ஏடிஎம் மையத்தின் செயல்பாட்டை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, உதகை கோட்டாட்சியர் சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் 300 மி.லி. முதல் 10 லிட்டர் வரையிலான பிளாஸ்டிக் கேன்களில் அடைக்கப்பட்டுள்ள குடிநீர், குளிர்பானங்கள் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் அம்மா குடிநீர் திட்டம் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து செயல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசுத் தரப்பிலிருந்து எத்தகைய முடிவும் அறிவிக்கப்படாததால் மாவட்டத்தில் அம்மா குடிநீர் விற்பனையை தொடர்வதா அல்லது நிறுத்திவிடுவதா என்ற குழப்பத்தில் உள்ளனர் அரசுத் துறை அதிகாரிகள்.