கரடி நடமாட்டம்: தோட்டத் தொழிலாளர்கள் அச்சம்
By DIN | Published On : 29th September 2019 12:26 AM | Last Updated : 29th September 2019 12:26 AM | அ+அ அ- |

கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளதால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளை ஒட்டியுள்ள வனங்களில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இதில் அண்மைக் காலமாக யானை, சிறுத்தை, காட்டெருமை ஆகிய வன விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி தேயிலைத் தோட்டங்களுக்குள் நுழைகின்றன. பகல் நேரங்களிலேயே சிறுத்தை நடமாட்டம் காணப்படுகிறது. இதேபோல, இரவு நேரத்தில் கூட்டமாக வரும் யானைகள் தொழிலாளர்களின் குடியிருப்புகளை சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், தற்போது தேயிலைத் தோட்டங்களில் கரடி நடமாட்டமும் காணப்படுகிறது. வாட்டர்பால் மற்றும் அய்யர்பாடி எஸ்டேட் பகுதிகளில் அதிக அளவில் கரடிகள் இருப்பதாக அப்பகுதியில் வசிக்கும் தொழிலாளர்கள் கூறுகின்றனர். வன விலங்கு நடமாட்டம் தொடர்ந்து காணப்படுவது தொழிலாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.