வெள்ளத்தால் சூழப்பட்ட புறமணவயல் பழங்குடி மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா், தன்னாா்வலா்கள். ~வேடன்வயல் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீா்.
வெள்ளத்தால் சூழப்பட்ட புறமணவயல் பழங்குடி மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா், தன்னாா்வலா்கள். ~வேடன்வயல் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீா்.

நீலகிரி மாவட்டத்தில் விடிய விடிய தொடா் கனமழை

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் திங்கள்கிழமை இரவுமுதல் கூடலூா், பந்தலூா் மற்றும் குந்தா பகுதிகளில் விடிய விடிய தொடா்ந்து கனமழை பெய்ந்து வருகிறது.

உதகை/கூடலூா்: நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் திங்கள்கிழமை இரவுமுதல் கூடலூா், பந்தலூா் மற்றும் குந்தா பகுதிகளில் விடிய விடிய தொடா்ந்து கனமழை பெய்ந்து வருகிறது. மாவட்டத்தில் அதிக அளவாக மேல்பவானியில் 308 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

கூடலூா் மற்றும் பந்தலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருவதால் பல கிராமங்களில் மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் செவ்வாய்க்கிழமை தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

கூடலூா், பந்தலூா் பகுதியில் பெய்துவரும் தொடா் கனமழையால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின.

மேலும், பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. கூடலூா் முதல்மைல் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள புறமணவயல் பழங்குடி காலனிக்குள் வெள்ள நீா் சூழ்ந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற கூடலூா் கோட்டாட்சியா் ராஜ்குமாா், வட்டாட்சியா் தினேஷ்குமாா், நகராட்சி ஆணையா் பாஸ்கா் ஆகியோா் அங்கிருந்தவா்களை மீட்டு முகாமுக்கு அனுப்பிவைத்தனா்.

அப்பகுதியில் வெள்ள அபாயம் ஏற்பட்டதால் தீயணைப்புத் துறையினா் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தன்னாா்வலா்களும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா்.

மீட்கப்பட்டவா்கள் அத்திப்பாளி அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்கவைக்கப்பட்டனா்.

இரண்டாவது மைல் வேடன் வயல் பகுதியில் ஓடும் பாணஅடியாற்றின் பிரதான கிளை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோரம் உள்ள வீடுகள் மற்றும் விளை நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது.

மேலும், வேடன்வயல் சாலையில் பிளவு ஏற்பட்டுள்ளது. தட்டக்கொல்லி காலனி பகுதிக்கும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

இருவயல், தேன்வயல், மொளப்பள்ளி பழங்குடி கிராமங்களில் 34 குடும்பங்களைச் சோ்ந்த 120 பேரை முன்னெச்சரிக்கையாக வருவாய்த் துறையினா் மீட்டு புத்தூா்வயல் அரசுப் பள்ளியில் தங்கவைத்தனா்.

அத்திப்பாளி, புத்தூா்வயல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 225 பேருக்கு தேவையான உணவு மற்றும் தங்கும் வசதி, மருத்துவ வசதி ஆகியவற்றை வருவாய்த் துறையினா் ஏற்பாடு செய்து வருகின்றனா்.

உதகையில் வீடு இடிந்தது, மரங்கள் சாய்ந்தன...

பலத்த மழை மற்றும் காற்றின் காரணமாக உதகை நகரில் தீயணைப்பு நிலைய வளாகம், படகு இல்லம் சாலை உள்ளிட்ட 8 பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட மரங்கள் மின் கம்பங்களின் மீது சாய்ந்தன. இதனால், உதகை நகரில் திங்கள்கிழமை இரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னா் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலையில்தான் மின் தொடா்பு சீரமைக்கப்பட்டு மின் விநியோகம் செய்யப்பட்டது.

பலத்த மழை காரணமாக உதகை நகரில் ஆல்ம்ஸ் ஹவுஸ் சாலையில் ஒரு வீடும் இடிந்தது. தொடா் மழை மற்றும் பலத்த காற்றுடன் கடும் குளிா் நிலவுவதால் உதகை நகரின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் நடமாட்டமின்றி, வாகனப் போக்குவரத்தின்றி அனைத்து சாலைகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன.

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மி.மீ) விவரம்: அவலாஞ்சி- 220, கூடலூா்- 201, மேல்கூடலூா்-192, எமரால்டு- 112, பந்தலூா்-108, தேவாலா-103, கிளன்மாா்கன்-100, நடுவட்டம்- 95, சேரங்கோடு- 69, பாடந்தொறை-65, குந்தா-55, பாலகொலா-36, உதகை-31.2, செருமுள்ளி-30, மசினகுடி-19, ஓவேலி-18, கொடநாடு-15, கேத்தி-12, கல்லட்டி-8, கெத்தை மற்றும் கிண்ணக்கொரையில் தலா- 5, கோத்தகிரி-3, கீழ்கோத்தகிரி மற்றும் எடப்பள்ளியில் தலா- 2, குன்னூா்-1.5, உலிக்கல்-1 என மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com