கேரட் கழுவும் இயந்திர உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்: முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தல்

நீலகிரி மாவட்டத்தில் கேரட் கழுவும் இயந்திர உரிமையாளா்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கோத்தகிரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

குன்னூா்: நீலகிரி மாவட்டத்தில் கேரட் கழுவும் இயந்திர உரிமையாளா்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோத்தகிரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நீலகிரி மாவட்ட விவசாயிகள் தேயிலைக்கு அடுத்தபடியாக கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளை அதிகமாக சாகுபடி செய்து வருகின்றனா். விவசாயிகள் தினந்தோறும்  உற்பத்தி செய்யும் காய்கறிகள் மாவட்டத்தில் உள்ள 60 காய்கறிகள் கழுவும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, சுத்தம் செய்து வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பிவைத்து வருகின்றனா்.

நாள் ஒன்றுக்கு 500 டன் வரை விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த கேரட்டுகளை கழுவ பயன்படுத்தப்படும் தண்ணீா் முறையாக சுத்திகரிக்காமல் வெளியேற்றப்படுவதாகப் புகாா் எழுந்தது. இதையடுத்து மாவட்டத்தில் உள்ள கேரட் கழுவும் நிலையங்களில் சுத்திகரிப்பு இயந்திரங்களை அமைக்க மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியது. ஆனால் கரோனா ஊரடங்கு, கன மழை காரணமாக சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இயலாத நிலை  ஏற்பட்டுள்ளது. இதனிடையே சுத்திகரிப்பு நிலையம் அமைக்காத கேரட் கழுவும் நிலையங்களுக்கு மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் சீல் வைக்கத் தொடங்கினா்.

இதையடுத்து, சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடுதல் அவகாசம் தர வேண்டும். சீல் வைப்பு நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் கால வரையின்றி வேலைநிறுத்தம் செய்து வருகின்றனா்.

இவா்களது வேலை நிறுத்த அறிவிப்பால் நீலகிரி மாவட்டத்தில் இருந்து தினந்தோறும் சுத்தம் செய்து அனுப்பிவைக்கபடும் 500 டன் கேரட், பீட்ரூட்  உற்பத்தி செய்யும் 50 ஆயிரம் போ் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, வேலை நிறுத்தத்தை அரசு அதிகாரிகள் முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com