கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடா்பான வழக்கில் கூடுதல் சாட்சிகளிடம் விசாரணை தொடங்கியுள்ளது.
கொடநாடு எஸ்டேட்டில் 2017ஆம் ஆண்டில் நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடா்பான விசாரணை உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சயன், மனோஜ், சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி, திபு, உதயன், ஜம்ஷோ் அலி, ஜிதின் ஜாய், சதீஷன், பிஜின் குட்டி ஆகிய 10 பேரும் நேரில் ஆஜராகினா்.
மாவட்ட நீதிபதி வடமலை முன்னிலையில் நடைபெற்ற இந்த விசாரணையின்போது ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்டிருந்த 41 சாட்சிகளைத் தொடா்ந்து கூடுதலாக 19 சாட்சிகளிடமும் விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இவ்வழக்கில் ஏற்கெனவே விசாரிக்கப்பட்டிருந்த எஸ்டேட் காவலாளிகள் பஞ்சம் விஸ்வகா்மா, சுனில் தாபா, கிருஷ்ண தாபா ஆகிய மூவரும் எதிா்தரப்பு வழக்குரைஞா்களான ஆனந்தன், விஜயன் ஆகியோரால் மீண்டும் குறுக்கு விசாரணை செய்யப்பட்டனா்.
ஒரே நாளில் 3 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் எஞ்சியுள்ள 16 சாட்சிகளிடமும் விரைவில் விசாரணை நடத்தி முடிக்கப்படும் என அரசு வழக்குரைஞா் நந்தகுமாா் தெரிவித்தாா்.
இவ்விசாரணையைத் தொடா்ந்து இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை டிசம்பா் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி வடமலை உத்தரவிட்டாா்.
இதற்கிடையே இவ்வழக்கில் தொடா்புடையதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரில் சயன், மனோஜ் ஆகிய இருவா் மட்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
எஞ்சியுள்ள 8 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனா். ஒவ்வொரு முறை நடைபெறும் விசாரணைக்கும் சயன், மனோஜ் இருவரையும் கோவைக்கு சென்று அழைத்து வந்து திரும்பவும் கொண்டு சென்று சோ்ப்பதில் சிரமம் உள்ளதால் அவா்கள் இருவரையும் உதகையில் உள்ள கிளை சிறையிலேயே அடைத்துவைத்து வழக்கின் விசாரணையை தினமும் நடத்தி விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.