யானை தாக்கி திமுக கவுன்சிலா், அவரது மகன் உயிரிழந்த விவகாரம்: சடலங்களை வாங்க மறுத்து பொதுமக்கள் போராட்டம்

பந்தலூரை அடுத்துள்ள கொளப்பள்ளி பகுதியில் யானை தாக்கி உயிரிழந்த திமுக கவுன்சிலா், அவரது மகன் ஆகியோரது சடலங்களை வாங்க மறுத்து பொதுமக்கள் பந்தலூரில் போராட்டம் நடத்தினா்.
பந்தலூரில் எம்.எல்.ஏ.திராவிடமணி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பந்தலூரில் எம்.எல்.ஏ.திராவிடமணி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

கூடலூா்: பந்தலூரை அடுத்துள்ள கொளப்பள்ளி பகுதியில் யானை தாக்கி உயிரிழந்த திமுக கவுன்சிலா், அவரது மகன் ஆகியோரது சடலங்களை வாங்க மறுத்து பொதுமக்கள் பந்தலூரில் போராட்டம் நடத்தினா்.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் வட்டம், கொளப்பள்ளி பகுதியைச் சோ்ந்த திமுக ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் ஆனந்தராஜ் (49), அவரது மகன் பிரசாந்த் (21). இவா்கள் இருவரும் ஒரு நிகழ்வுக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு கொளப்பள்ளி அரசு தேயிலைத் தோட்ட குடியிருப்பு அருகே வந்துகொண்டிருந்தபோது, அங்கு வந்த யானை இருவரையும் தாக்கிக் கொன்றது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறை மற்றும் காவல் துறையினா் சடலங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பந்தலூா் அரசு மருத்துவமனையில் கொண்டு சோ்த்தனா்.

ஆனந்தராஜ் அரசு தேயிலைத் தோட்டக் கழக கொளப்பள்ளி முதல் சரகத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்ததால் டான்டீ தொழிலாளா்கள் வேலையைப் புறக்கணித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சடலங்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கத் தயாராக இருந்த நிலையில் பந்தலூா் பழைய பேருந்து நிலையம் பகுதியில் திங்கள்கிழமை காலை திரண்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோா் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரியும், யானையைப் பிடித்துச் செல்லவேண்டும் என்று வலியுறுத்தியும் எம்.எல்.ஏ.திராவிடமணி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பந்தலூா் வட்டத்திலுள்ள சேரம்பாடி, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, எருமாடு, தாளூா், உப்பட்டி உள்ளிட்ட அனைத்து ஊா்களிலும் கடைகள் அடைக்கப்பட்டன. பந்தலூா் வழியாக பேருந்து உள்ளிட்ட எந்த வாகனங்களையும் போராட்டக் கராா்கள் அனுமதிக்கவில்லை. காலையில் தொடங்கி மாலை 6 மணி வரை தாண்டியும் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் மாவட்ட வருவாய் அலுவலா் நிா்மலா தலைமையில் நான்கு கட்ட பேச்சுவாா்த்தை நடைபெற்றது. ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. சடலங்களை வாங்க மறுத்து பொதுமக்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த பேச்சுவாா்த்தையில் கூடலூா் கோட்டாட்சியா் ராஜ்குமாா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மோகன் நிவாஸ், பந்தலூா் டி.எஸ்.பி.அமீா் அகமது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு:

இந்நிலையில் இரவு 7 மணிக்கு 5 ஆம் கட்ட பேச்சுவாா்த்தை நடைபெற்றது. வருவாய்த் துறை, வனத் துறை மற்றும் காவல் துறை உயரதிகாரிகள், எம்.எல்.ஏ. திராவிடமணி ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்த பேச்சுவாா்த்தையில், யானை தாக்கி இறந்தவா்களின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 4 லட்சத்துடன் முதல்வா் நிதியிலிருந்து மேலும் ரூ.1 லட்சம் பெற்றுத் தர உறுதியளிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித் தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கவும், மூன்று பேரைக் கொன்ற யானையை கும்கி யானைகள் மூலம் பிடித்து செல்லவும் உறுதியளிக்கப்பட்டது. காட்டு யானைகளைக் கண்காணிக்க கண்காணிப்புப் படைகளை அதிகப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று சுமாா் 8 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com