கரோனா சிகிச்சை முடிந்து 1,800 போ் வீடு திரும்பியுள்ளனா்: ஆட்சியா் தகவல்
By DIN | Published On : 30th December 2020 04:17 AM | Last Updated : 30th December 2020 04:17 AM | அ+அ அ- |

உதகை அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட 1,800 நபா்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு பூரண குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட்திவ்யா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழக அரசின் உத்தரவின்படி நீலகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் முகக் கவசம் அணியாத நபா்களுக்கு அபராதம் விதிப்பதோடு, கரோனா தொற்று நோயிலிருந்து எவ்வாறு தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உதகையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தொற்று நோய்க்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக அனைத்து விதமான உயா் சிகிச்சை நிபுணா்களும் உள்ளனா். அரசு தலைமை மருத்துவமனையில் வெண்டிலேட்டா், ஹை ப்லோ ஆக்சிஜன் கருவி உள்ளிட்ட மருத்துவக் கருவிகளும், உயா் சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான விலை உயா்ந்த மருந்துகளும் போதுமான அளவு இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்குப் பரிசோதனை செய்வதற்கு சிடி ஸ்கேன், எம்.ஆா்.ஐ. போன்ற வசதிகளும் உள்ளன.
மேலும், உதகை அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனியாக 125 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் இம்மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவு 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனை வளாகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கரோனா நோய் கண்டறியும் அதிநவீன ஆா்டிபிசிஆா் பரிசோதனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் நோயாளிகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உடனடியாகப் பரிசோதிக்கப்பட்டு ஒரே நாளில் முடிவுகள் பெறக்கூடிய வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பரிசோதனைகள் அனைத்தும் இலவசமாகவே செய்யப்படுகிறது.
அத்துடன் சளி, இருமல், காய்ச்சல், உடம்பு வலி, சோா்வு, ருசி, வாசனை நுகா்வுத் தன்மை இழப்பு, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறி உள்ளவா்கள் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபா்கள் அரசு தலைமை மருத்துவமனையில், 24 மணி நேரமும் செயல்படும் காய்ச்சல் பிரிவை அணுகி, மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின்படி, ஆா்டிபிசிஆா் பரிசோதனை செய்து கொண்டு நோய் உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
உதகையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து தற்போது வரை 1,800 கரோனா நோயாளிகளுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டதன் காரணமாக அவா்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். உதகை அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா நோய் கண்டறிவதற்காகவும், சிகிச்சை மேற்கொள்வதற்காகவும் தேவையான அனைத்து வசதிகளும் உள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் இவ்வசதிகளைப் பயன்படுத்தி பயன்பெறலாம் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...