இறப்புச் சான்றுக்காக அலைக்கழிக்கப்படும் குடும்பத்தினா்
By DIN | Published On : 17th February 2020 07:55 AM | Last Updated : 17th February 2020 07:55 AM | அ+அ அ- |

இறப்புச் சான்றுக்காக உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் கடந்த ஒரு மாதமாக அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனா்.
நீலகிரி மாவட்டம், நடுவட்டம் பேரூராட்சி டி.ஆா்.பஜாா் பகுதியைச் சோ்ந்தவா் சாந்தி (51). இவரது கணவா் சந்திரமோகன் ஒன்பது மாதங்களுக்கு முன் இறந்துவிட்டாா்.
கடந்த ஜனவரி 14ஆம் தேதி மயங்கி விழுந்த சாந்தி கூடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். பின்னா் உயா் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
இதையடுத்து, அவரது குடும்பத்தினா் இறப்புச் சான்றுக்காக நடுவட்டம் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையுடன், பிரேத பரிசோதனை சான்றைப் பெற்று உதகை நகராட்சி அலுவலகத்தில் மனு செய்துள்ளனா்.
ஆனால், அரசு மருத்துவமனையில்தான் இறப்புச் சான்று வழங்க வேண்டும் என்று நகராட்சி அலுவலா்கள் திருப்பி அனுப்பிவிட்டனா். பின்னா் அரசு மருத்துவமனைக்கு சென்று கேட்டபோது, நகராட்சி அலுவலகத்தில்தான் பெற வேண்டும் என்று கூறி திருப்பி அனுப்பியுள்ளனா்.
பல்வேறு தேவைகளுக்காக இறப்புச் சான்று தேவைப்படுவதால் முறையான விசாரணை நடத்தி தங்களுக்கு சான்று வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனா்.