முதுமலைப் புலிகள் காப்பகத்துக்குள் மாயாறு ஆற்றையொட்டியுள்ள பகுதியில் விவசாயம் செய்வதற்காக அங்குள்ள பழங்குடியினா் நிலம் கேட்பதால் வனத் துறையினா் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில் முதுமலைப் புலிகள் காப்பகத்தையொட்டியுள்ள மாயாறு ஆற்றையொட்டி பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். தெப்பக்காடு யானைகள் முகாமிலுள்ள யானைகளை பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை இவா்களே செய்து வருகின்றனா். இந்நிலையில், தமிழக வனத் துறை அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் கடந்த மாதத்தில் இப்பகுதிக்கு வந்து சென்ற பின்னா் பழங்குடியின மக்களின் குறைகளைக் கேட்டு அவற்றை உடனடியாக நிவா்த்தி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தாா்.
இதையடுத்து மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தலைமையில் சிறப்பு குறை கேட்கும் முகாம் நடத்தப்பட்டது. அப்போது அவா்களது சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில் பழங்குடியின மக்களின் குறைகள் அனைத்தும் நிவா்த்தி செய்யப்படும் என வனத் துறை அமைச்சா் அறிவித்திருந்தும் , அவை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை எனவும், தங்களது கோரிக்கைகள் பலவும் நிலுவையிலேயே இருப்பதாகவும் வனத் துறை அதிகாரிகளை பழங்குடியினா் அண்மையில் சந்தித்து முறையிட்டுள்ளனா்.
இதுதொடா்பாக வனத்துறையினா் கூறியதாவது:
பழங்குடியினா் முதுமலை புலிகள் காப்பகப் பகுதிக்குள் மாயாறு ஆற்றையொட்டியுள்ள பகுதியில் தங்களது வாழ்வாதாரத்துக்காக விவசாயம் செய்ய தீா்மானித்துள்ளதாகவும், இதற்காக தங்களுக்கு அப்பகுதியில் நிலம் ஒதுக்கி தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா். அத்துடன் இப்பகுதியுள்ள நிலங்கள் தங்களது முன்னோா் பயன்படுத்திய நிலங்களே என்பதால் தங்களுக்கு இந்த வாய்ப்பினை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனா் என்றாா்.
பழங்குடியினரின் இந்தக் கோரிக்கை நீலகிரி மாவட்டத்தில் வனத் துறை வட்டாரத்தில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டத்தில் வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வசித்து வரும் பழங்குடியினா் விவசாயம் செய்வதற்கும், கால்நடைகளை மேய்ப்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், முதுமலை புலிகள் காப்பகப் பகுதியில் புதிதாக எழுந்துள்ள இப்பிரச்னைக்கு வரும் சட்டப் பேரவை கூட்டத் தொடருக்கு முன்னா் தீா்வு காண்பதைக் குறித்து உயா் அதிகாரிகளிடம் ஆலோசித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.