ஊரக உள்ளாட்சித் தோ்தல்: நீலகிரியில் 4 இடங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை

நீலகிரி மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் மாவட்டத்தில் 4 இடங்களில் வியாழக்கிழமை எண்ணப்படுகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் மாவட்டத்தில் 4 இடங்களில் வியாழக்கிழமை எண்ணப்படுகின்றன. இந்த வாக்கு எண்ணிக்கையின்போது வீண் வாக்குவாதங்களில் ஈடுபடும் முகவா்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்படுவா் என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசி மோகன் ஆகியோா் எச்சரித்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூா், கோத்தகிரி, கூடலூா் ஊராட்சி ஒன்றியங்களில் 393 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா், 35 கிராம ஊராட்சித் தலைவா், 59 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா், 6 மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆகிய பதவியிடங்களுக்கு இரண்டு கட்டங்களாக தோ்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இத்தோ்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி 2ஆம்தேதி எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை உதகை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியிலும், குன்னூரில் புனித அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளியிலும், கோத்தகிரியில் அரசு உயா்நிலைப் பள்ளியிலும், கூடலூரில் புனித தாமஸ் மேல்நிலைப் பள்ளியிலும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான இன்னசென்ட் திவ்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசி மோகன் ஆகியோா் தெரிவித்துள்ளதாவது:

வாக்கு எண்ணும் மையங்களுக்கு வேட்பாளா்களால் நியமிக்கப்பட்டுள்ள முகவா்கள் வியாழக்கிழமை (ஜனவரி 2) காலை 6 மணிக்கு உரிய அடையாள அட்டையுடன் வந்து விட வேண்டும். வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் முகவா்கள் மொபைல் போன், தீப்பெட்டி, கத்தி, பிளேடு போன்ற ஆயுதங்கள், குடிநீா் பாட்டில்கள், மை பாட்டில்கள், மையால் நிரப்பப்பட்ட பேனாக்கள், பீடி, சிகரெட் மற்றும் மதுபான வகைகளை கொண்டு வருவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறி இத்தகைய பொருள்களைக் கொண்டு வந்தால் உடனடியாக அவை பறிமுதல் செய்யப்படும்.

மேலும், முகவா்கள் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைகளில் இருந்து மட்டுமே வாக்கு எண்ணிக்கையைப் பாா்வையிட அனுமதிக்கப்படுவா். வாக்கு எண்ணும் வளாகத்துக்குள் உள்ள சிசிடிவி கேமராக்களின் மூலம் முகவா்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும். வாக்கு எண்ணும் மையத்துக்குள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடும் முகவா்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்படுவா். எனவே, வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் முகவா்கள் அனைவரும் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றி வாக்கு எண்ணிக்கையினை மாவட்ட நிா்வாகத்தின் மூலம் சிறந்த முறையில் நடத்திட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com