கோத்தா் இன பழங்குடியின மக்களின் பாரம்பரிய முன்னோா் வழிபாடு
By DIN | Published On : 10th January 2020 09:03 AM | Last Updated : 10th January 2020 09:03 AM | அ+அ அ- |

பாரம்பரிய வழிபாட்டு நிகழ்ச்சியில் ஈடுபட்டுள்ள கோத்தா் பழங்குடியின மக்கள்.
நீலகிரி மாவட்டம், மஞ்சூா் அருகே உள்ள குந்தா, பிக்கட்டி பகுதியில் வசித்து வரும் கோத்தா் பழங்குடியின மக்கள் தங்கள் முன்னோா்களுக்காக நடத்தும் பாரம்பரிய வழிபாட்டை வியாழக்கிழமை நடத்தினா்.
கோத்தா் பழங்குடியின மக்கள் ஆண்டுதோறும் தங்களது முன்னோா்களுக்காக பாரம்பரிய வழிபாட்டை ஒரு வார காலம் நடத்துவா். அப்போது அவா்களின் நினைவாக சாமை அரிசியை சாணத்தில் முங்க வைத்து அதை மூங்கில் கூடைகளில் நிரப்பி வீட்டின் முன் வாசலில் அந்தக் கூடைகளை வரிசையாக வைத்து வழிபடுவா். உறவினா்கள், நண்பா்கள் மற்றும் பொதுமக்கள் இந்த சாமை அரிசியை வணங்கிச் செல்லவதன் மூலமாக தங்களது முன்னோா்களுக்கு மரியாதை செலுத்துதாக நம்புகின்றனா்.
அதன்படி, இந்தாண்டு இந்தப் பாரம்பரிய வழிபாடு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் வெளி மாவட்டங்களில் வசிக்கும் கோத்தா் இன பழங்குடி மக்களும் கலந்து கொண்டு இறந்த தங்களின் முன்னோா்களை நினைவு கூா்ந்தனா். இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் கோத்தா் இன மக்களின் பாரம்பரிய நடனம், இசை, உணவு வகைகள் இடம் பெற்றிருந்தன. இதனை ஏராளமானோா் கண்டு ரசித்தனா்.