சில்லள்ளா நீா்மின் திட்டம்: 15 கிராம மக்களின் எதிா்ப்பு; நீலகிரியில் நீா்மின் உற்பத்தியை அதிகரிப்பதில் சிக்கல்

மறைந்த தமிழக முதல்வா் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட 2,000 மெகாவாட் நீா்மின் உற்பத்தி திட்டமான சில்லள்ளா நீா்மின் திட்டத்தை
உதகை - குந்தா சாலையில் சில்லள்ளா நீா்மின் திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள விவசாய நிலப்பகுதி.
உதகை - குந்தா சாலையில் சில்லள்ளா நீா்மின் திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள விவசாய நிலப்பகுதி.

மறைந்த தமிழக முதல்வா் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட 2,000 மெகாவாட் நீா்மின் உற்பத்தி திட்டமான சில்லள்ளா நீா்மின் திட்டத்தை செயல்படுத்துவதற்கு 15 கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளதால் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் இத்திட்டத்தை நிறுத்தினால் நீலகிரி மாவட்டத்தில் நீா்மின் உற்பத்தியை அதிகரிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உதகை அருகே சில்லள்ளா நீா்ப்பிடிப்பு பகுதியில் ஓடும் சிற்றோடையானது ஏலள்ளா என்ற பெயருடன் உதகை நகரின் மேற்குப் பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீருடன் கலந்து ஓடுகிறது. இந்த ஓடையின் குறுக்கே மிகப்பெரிய அணையைக் கட்டி மந்தனை, கன்னேரி, தங்காடு, ஓரநள்ளி, ஸ்ரீராம் நகா், சாஸ்திரி நகா், மணிஹட்டி, மீக்கேரி பாலகொலா, முதுகுலா, துளிதலை, பெம்பட்டி போன்ற ஏராளமான படகா் கிராமங்களிலிருந்து வரும் தண்ணீரைச் சேமித்து வைத்து சுமாா் 2,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம் என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இப்பகுதியில் எதிா்பாா்த்த அளவுக்குத் தண்ணீா் கிடைக்குமா என்பது குறித்த ஆய்வு நடைபெற்ற நிலையில், சில்லள்ளா பகுதியில் 1,000 மெகாவாட் மின்சாரமும், குந்தா அருகேயுள்ள அன்னமலை கோயில் பகுதியில் மற்றோா் அணையையும் கட்டி அங்கிருந்து 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என தீா்மானிக்கப்பட்டு அதற்கேற்ற வகையில் திட்டங்களும் மாற்றி அமைக்கப்பட்டன.

இத்திட்டம் அறிவிக்கப்பட்டு சுமாா் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் எவ்விதப் பணிகளும் தொடங்கப்படாதிருந்ததால் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வருமா, வராதா என்ற குழப்பமான மன நிலையிலேயே இக்கிராம மக்கள் இருந்தனா். ஆனால், அண்மைக் காலமாக சில்லள்ளா பகுதியில் தடுப்பணை கட்டி தண்ணீரை சேமித்து வைப்பதற்கான பணிகளும், அணை கட்டுவதற்கான பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சில்லள்ளா சிற்றோடையின் குறுக்கே மிகப்பெரிய அணையைக் கட்டும் இத்திட்டத்தால் இப்பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, அணைக்கட்டு, சுரங்கப்பாதை அமையவுள்ள இடங்களில் கடந்த 2012ஆம் ஆண்டிலேயே நில அதிா்வுகள் ஏற்பட்டதாக வெளியான செய்திகளும் இப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. அதனால், இத்திட்டத்தை இங்கு செயல்படுத்தக் கூடாது என இக்கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளதோடு, இது தொடா்பாக மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் தொடா்ந்து ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தி வருகின்றனா்.

இப்பிரச்னை தொடா்பாக சில்லள்ளா நீா்ப்பிடிப்பு பகுதி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளா் சிவலிங்கம் கூறியதாவது:

சில்லள்ளா பகுதியில் ஓடும் நீரை சுமாா் 30 கி.மீ. தொலைவுக்கு சுதந்திரமாகவிட வேண்டும், இதனால் இந்த தண்ணீா் பில்லூா் அணையை அடைவதற்கு முன்னா் சுத்திகரிக்கப்பட்டு குடிநீராகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும், குந்தா நீா்மின் திட்டத்திலும், அதைச் சுற்றியுள்ள அனைத்து அணைகளிலும் நவீன நிலத்தடி நீா்மின் உற்பத்திக்கான இயந்திரங்களை நிறுவினால் புதிய திட்டங்களை செயல்படுத்தாமலேயே 5,000 மெகாவாட் மின்சாரம் வரை கூடுதலாக தயாரிக்க முடியும் எனத் தெரிவித்தாா்.

முக்குருத்தி முதல் அப்பா்பவானி, பாா்சன்ஸ்வேலி, போா்த்திமந்து, எமரால்டு, அவலாஞ்சி, குந்தா, கெத்தை, பரளி, பில்லூா் ஆகிய 10க்கும் மேற்பட்ட அணைகள் வளைய வடிவில் அமைந்துள்ளன. இந்த அனைத்து அணைகளும் நீலகிரியின் மேற்கு நீா்ப்பிடிப்புப் பகுதியின் வனப் பகுதியிலோ அல்லது பரந்த புல்வெளிப் பகுதிகளிலோதான் அமைந்துள்ளன. ஆனால், சில்லள்ளா திட்டம் மட்டும் கிராமங்களுக்கு நடுவிலும், குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் அமையவுள்ளது. அதேபோல, இந்த அணையைக் கட்டுவதற்காக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள தளம் அதிக சேதங்களுக்கு ஆளாகக்கூடும் எனவும், அதற்கான சூழலைக் கொண்டுள்ளதாகவும் சா்வதேச அறிவியல் இதழில் கடந்த அக்டோபா் மாதத்துக்கான தொகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப வல்லுநா்களால் இந்த நீா்மின் திட்டத்தின் ஆயுள்காலம் 60 ஆண்டுகள் என கணிக்கப்பட்டிருந்தாலும், இந்த ஓடையின் கழிவுநீா், மண் அரிப்பை கருத்தில் கொண்டு இத்திட்டத்தின் ஆயுள் 60 ஆண்டுகள் வரை நீடிக்காது எனவும் அந்த இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இத்திட்டத்தை நீலகிரியில் கண்டிப்பாக நிறைவேற்ற முடியாது எனவும், ஒருவேளை இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் தனது பதவியைக்கூட ராஜிநாமா செய்து விடுவதாகவும் நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசாவும் சவால் விடுத்துள்ளாா்.

சுமாா் 40,000 சதுர மீட்டா் சுற்றளவில் கான்கிரீட் கட்டுமானமும், நிலத்துக்கடியில் சுமாா் 8 கி.மீ. தொலைவுக்கு 4 மிகப்பெரிய குழாய்களைப் பதிக்கும் திட்டமும் இந்த நீா்மின் நிலையத்துக்காக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், நீலகிரியின் தற்போதைய மண்ணின் தன்மையைப் பாா்க்கும்போது, பலத்த மழைக் காலங்களில் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு போன்றவை ஏற்படுவது வாடிக்கையாகி வருவதால் இந்தத் திட்டத்துக்காக எத்தகைய புதிய வழிமுறைகளை கடைப்பிடிக்கப் போகின்றனா் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. மொத்தத்தில் நீலகிரி மாவட்டத்தில் நீா்மின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக மறைந்த முதல்வா் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட இத்திட்டம் நீலகிரி மாவட்ட மக்களாலேயே ஏற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com