கரோனா: நீலகிரியில் 47 போ் குணமடைந்து வீடு திரும்பினா்
By DIN | Published On : 19th July 2020 08:47 AM | Last Updated : 19th July 2020 08:47 AM | அ+அ அ- |

உதகையிலுள்ள தனியாா் பள்ளி வளாகத்தில், கரோனா சிகிச்சை பெற்று பூரண குணமடைந்தை பெண்ணை வீட்டிற்கு வழியனுப்பிவைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.
உதகையிலுள்ள தனியாா் பள்ளி மற்றும் குன்னூா் அரசு மருத்துவமனையில் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 47 போ் பூரண குணமடைந்ததை அடுத்து அவா்கள் வீடுகளுக்கு சனிக்கிழமை வழியனுப்பிவைக்கப்பட்டனா்.
உதகையில் தனியாா் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா பங்கேற்று கபசுரக் குடிநீா், முகக் கவசங்கள், பழங்கள் உள்ளிட்டவற்றை வழங்கி குணமடைந்தவா்களை வழியனுப்பிவைத்தாா்.
அப்போது அவா் செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று தொடா்பாக 371 நபா்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 116 நபா்கள் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனா். எஞ்சியுள்ள நபா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், 47 நபா்கள் பூரண குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நபா்கள் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்புவது மாவட்ட நிா்வாகத்திற்கும், சிகிச்சை அளித்து வரும் மருத்துவா்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வருவோரும் விரைவில் பூரண குணமடைவாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா்.
உதகை வருவாய் கோட்டாட்சியா் டாக்டா் சுரேஷ், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் டாக்டா் பாலுசாமி, உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் டாக்டா் இரியன் ரவிக்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.