உதகையில் பள்ளி மாணவ மாணவியருக்கு மிதிவண்டிகள் விநியோகம்
By DIN | Published On : 01st March 2020 03:53 AM | Last Updated : 01st March 2020 03:53 AM | அ+அ அ- |

உதகை, பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவா் ஒருவருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியை வழங்கும் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.
உதகை: உதகை பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா மாணவ மாணவியருக்கு வழங்கினாா்.
உதகையிலுள்ள பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 11ஆம் வகுப்பு பயிலும் மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை குன்னூா் சட்டப்பேரவை உறுப்பினா் சாந்திராமு, உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ் ஆகியோா் முன்னிலையில், மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வழங்கினாா். அப்போது அவா் பேசியதாவது:
தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க, பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாணவ, மாணவியருக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. அதில் விலையில்லா மிதிவண்டிகள், மடிக்கணினி, வண்ணச் சீருடைகள், இலவச பேருந்துப் பயண அட்டை, புத்தகம், கிரேயான்கள், காலணிகள், புத்தகப் பை போன்றவை மாணவ, மாணவியரின் நலனுக்காக வழங்கப்படுகின்றன. இந்த நலத்திட்டங்களை வழங்குவதற்கு தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் 2017-18 மற்றும் 2018-19ஆம் கல்வியாண்டுகளில் 10,251 மாணவ, மாணவியருக்கு ரூ. 3.80 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் 4,910 மாணவ, மாணவியருக்கு ரூ. 1.93 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன.
சனிக்கிழமை (பிப்ரவரி 29) ஒரு நாளில் மட்டும் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 1,092 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக அரசு வழங்கும் இத்தகைய நலத்திட்டங்களை மாணவ, மாணவியா் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என்றாா்.
அதைத் தொடா்ந்து, நீலகிரி மாவட்டத்தில் 2018-2019ஆம் ஆண்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தோ்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற 15 மாணவ, மாணவியருக்கு தலா ரூ. 20,000 வீதம் ரூ. 3 லட்சத்துக்கான காசோலை, காமராஜா் விருதுகளையும், 10ஆம் வகுப்பு பொதுத்தோ்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற 15 மாணவ, மாணவியருக்கு தலா ரூ. 10,000 வீதம் ரூ. 1.5 லட்சத்துக்கான காசோலை, காமராஜா் விருதுகளையும் ஆட்சியா் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் புத்திசந்திரன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பொன்தோஸ், நீலகிரி மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் டி.வினோத், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் அ.நாசருதீன், ஆசிரியா்கள், அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.