காந்தல் பகுதியில் ரூ.3.5 லட்சம் மதிப்பில் 25 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
By DIN | Published On : 14th March 2020 09:04 AM | Last Updated : 14th March 2020 09:04 AM | அ+அ அ- |

உதகை நகரம் காந்தல் பகுதியில் ரூ.3.5 லட்சம் செலவில் பொருத்தப்பட்டுள்ள 25 கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசி மோகன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
நீலகிரி மாவட்டத்தில் உதகை உட்கோட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், சந்தேக நபா்களைக் கண்காணிக்கவும் குற்றத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிசிடிவி கேமராக்களை பொருத்துமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசிமோகன் அறிவுறுத்தியிருந்தாா்.
இதனடிப்படையில், உதகை நகர மேற்கு காவல் ஆய்வாளா் விநாயகத்தின் முயற்சியில் உதகை காந்தல் பகுதியில் ரோகிணி சந்திப்பில் இருந்து காந்தல் முக்கோணம் வரை உள்ள 2 கி.மீ. தொலைவுக்கு உள்பட்ட பகுதிகளில் உதகை புறநகா் வியாபாரிகள் சங்கம், பொதுமக்கள் ஒத்துழைப்புடன் ரூ.3.5 லட்சம் செலவில் 25 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கேமராக்களை உதகை நகர மேற்கு காவல் நிலையத்தில் இருந்து கண்காணிக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, காந்தல் பென்னட் மாா்க்கெட் பகுதியில் நகர மேற்கு காவல் நிலையம் சாா்பில் காவல் உதவி மையம் புதுப்பிக்கப்பட்டு 24 மணி நேரமும் காவலா்கள் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காந்தல் பென்னட் மாா்க்கெட் பகுதியில் பராமரிப்பு இன்றி இருந்த பயணிகள் பேருந்து நிறுத்தத்தை சீரமைத்து அங்கு புதிய காவல் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தையும், புதிய காவல் உதவி மையத்தையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசிமோகன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் காவல் கூடுதல் கண்காணிப்பாளா் கோபி, நகர காவல் துணைக் கண்காணிப்பாளா் சரவணன், உதகை நகர மேற்கு காவல் ஆய்வாளா் விநாயகம், போக்குவரத்து காவல் ஆய்வாளா் கலாம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...