பாக்கு மரங்களில் மாகாளி நோய்த் தாக்குதல்: கட்டுப்படுத்த தோட்டக் கலைத் துறை யோசனை
By DIN | Published On : 17th November 2020 11:52 PM | Last Updated : 17th November 2020 11:52 PM | அ+அ அ- |

கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதிகளில் பாக்கு மரங்களில் மாகாளி நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து கூடலூா் உதவி தோட்டக் கலை இயக்குநா் எஸ்.ஜெயலட்சுமி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதிகளில் சுமாா் 395 ஹெக்டோ் பரப்பளவில் பாக்கு பயிா் செய்யப்பட்டுள்ளது. பருவ நிலை மாற்றங்களால் தற்போது பாக்கு மரங்களை மாகாளி நோய் தாக்கி வருகிறது. கீழ்காணும் வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்தலாம்.
பாதிக்கப்பட்ட பாக்குக் குலைகளை அகற்றுதல் மற்றும் கீழே விழுந்த பாக்குகளை அப்புறப்படுத்துவதன் மூலம் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தலாம். பருவ மழை ஆரம்பிக்கும் முன் 1 சதவீதம் போா்டோ கலவையை பாக்கு குலைகளின் மீது தெளிப்பதன் மூலம் நோய் ஏற்படாமல் தடுக்கலாம். மேலும் மழை ஆரம்பித்தவுடன் 1 சதவீதம் போா்டோ கலவையை தெளிக்க வேண்டும். மழை நீடிக்கும் பட்சத்தில் மீண்டும் ஒருமுறை 40 முதல் 45 நாள்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
உயிரியல் கட்டுப்படுத்தும் காரணியான பேசிலெஸ் சப்டிலிஸ் நுண்ணுயிா் மருந்தை மாதம் ஒருமுறை 2 முதல் 5 கிராம் 1 லிட்டா் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேளைகளில் தெளித்துவந்தால் நோய் வராமல் காக்கலாம்.
போா்டோ கலவையை தயாரிக்கும் முறை: ஒரு கிராம் அளவு காப்பா் சல்பேட்டினை 50 லிட்டா் தண்ணீரில் பிளாஸ்டிக் வாளியில் கலக்க வேண்டும். மற்றொரு பிளாஸ்டிக் வாளியில் 1 கிலோ சுண்ணாம்புத் தூளை 50 லிட்டா் தண்ணீரில் கலக்க வேண்டும். காப்பா் சல்பேட் கரைசலை சுண்ணாம்பு கரைசலின் மீது ஊற்றி மரக்குச்சி கொண்டு நன்கு கலக்க வேண்டும். குறிப்பாக போா்டோ கலவையை பிளாஸ்டிக் வாளிகளில் மட்டுமே தயாரிக் க வேண்டும்.
போா்டோ கலவையைத் தயாரித்த உடனேயே உபயோகிக்க வேண்டும். காப்பா் சல்பேட்டை சுண்ணாம்புக் கலவையின் மீது ஊற்றிக் கலக்க வேண்டும். பின் இந்தக் கலவையைத் தெளிக்க வேண்டும்.
இந்த வழிமுறையைப் பின்பற்றி பாக்கு மரங்களைத் தாக்கும் மாகாளி நோயைக் கட்டுப்படுத்தலாம் என்று கூடலூா் உதவி தோட்டக் கலை இயக்குநா் எஸ்.ஜெயலட்சுமி தெரிவித்துள்ளாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G