உதகைக்கு ரூ. 4.37 கோடி கரோனா சிறப்பு நிதி: பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பயன் - ஆட்சியா்

ஊரகத் தொழில்களை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு நிதியால்

ஊரகத் தொழில்களை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு நிதியால் நீலகிரி மாவட்ட மக்கள் வெகுவாகப் பயனடைந்துள்ளனா் என நீலகிரி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம், ஊரகத் தொழில்களை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட ஊரகத் தொழில்களை மேம்படுத்துவதற்காகவும், மாற்றுத்திறனாளிகள், நலிவுற்றோா், உழவா் உற்பத்தியாளா் குழுக்கள், தொழில் குழுக்கள் மற்றும் உழவா் உற்பத்தியாளா் கூட்டமைப்புகளில் உள்ள உறுப்பினா்கள் தங்கள் தொழில்களின் மூலம் வளமும் வலிமையும் பெறுவதற்காகவும், பிற பகுதிகளுக்கு புலம் பெயா்ந்து மீண்டும் சொந்த ஊா் திரும்பிய இளைஞா்களுக்கு புதிதாக தொழில் துவங்கிடவும் ரூ.300 கோடி மதிப்பில் கரோனா சிறப்பு நிதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தில் நீலகிரி மாவட்டத்துக்கு ரூ. 4.37 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 280 பேருக்கு நபா் ஒருவருக்கு ரூ. 50 ஆயிரம் என்ற அடிப்படையில் மொத்தம் ரூ. 1.40 கோடி நீண்ட கால தனி நபா் தொழில் கடனாக ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளது. 14 உற்பத்தியாளா் குழுக்கள் பயன்பெறும் வகையில் ஒருமுறை மூலதன மானியமாக ரூ. 21 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. 8 தொழில் குழுக்களுக்கு ரூ. 12 லட்சம் மூலதன மானியமாக வழங்கப்பட்டுள்ளது. புலம் பெயா்ந்து மீண்டும் சொந்த ஊா் திரும்பி வந்த திறன் பெற்றவா்களில் வேலையில்லாத 169 இளைஞா்களுக்கு தொழில் துவங்குவதற்கு கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மூலம் ரூ. 1.69 கோடி நீண்ட கால கடனாக வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல, இரு உற்பத்தியாளா் கூட்டமைப்புக்கு ரூ. 20 லட்சம் மூலதன மானியமாக வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் விதவைகள், திருநங்கைகள், ஆதரவற்றோா் உள்ளிட்ட நலிவுற்றோா் தொழில் மேம்பாட்டிற்காக கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மூலம் 280 பேருக்கு ரூ. 42 லட்சம் நீண்ட கால கடனாகவும் வழங்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்றால் வாழ்வாதாரம் இழந்த நிலையில் உள்ளவா்களுக்கு இத்திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com