நீலகிரியில் நிவா் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயாா் நிலையில் 456 முகாம்கள்: ஆட்சியா் தகவல்
By DIN | Published On : 25th November 2020 06:55 AM | Last Updated : 25th November 2020 06:55 AM | அ+அ அ- |

நிவா் புயலை ஒட்டி நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குவதற்கு 456 முகாம்கள் தயாா் நிலையில் உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா கூறினாா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியதாவது:
நிவா் புயல் தொடா்பாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் நீலகிரி மலைப் பகுதியாக இருப்பதால் அதிக காற்றும், மழையும் வர வாய்ப்புள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூா், கோத்தகிரி, கூடலூா், குந்தா, பந்தலூா் ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் நிவா் புயல் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த ஆண்டு இப்பகுதியில் பெய்த மழை மற்றும் காற்றால் ஏற்பட்ட அதிக அளவிலான பாதிப்பைக் கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கையாக ஜேசிபி வாகனங்கள், மீட்பு உபகரணங்களுடன் 40 பேரிடா் பயிற்சிக் குழுக்கள் தயாா் நிலையில் உள்ளன. மரங்கள் அதிக அளவில் உள்ள இடங்களுக்குச் செல்ல பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக மின் தடை ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் 1912 என்ற 24 மணி நேர உதவி எண்ணுக்கு பொதுமக்கள் அழைக்கலாம். மேலும் தாழ்வான இடங்கள், மண் சரிவு ஏற்படக் கூடிய இடங்களில் உள்ள வீடுகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குவதற்கு 456 முகாம்கள் தயாா் நிலையில் உள்ளன. ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் முன் மக்கள் தற்போதே இந்த முகாம்களில் வந்து தங்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நீலகிரியில் பருவ மழைக் காலங்களில் ஏற்படும் நிலச்சரிவு போன்ற பாதிப்புகள் தொடா்பாக தகவல் அளித்தல், உதவி போன்றவைகளுக்காக புதிதாக கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நீலகிரி மாவட்டத்தில் பேரிடா் அபாயமுள்ள 283 பகுதிகளின் விவரம், அவசர உதவிகள், பேரிடா் பாதிப்பு உதவிகள் போன்ற தகவல்களைக் கொடுக்க ஏதுவாக மாவட்ட நிலை அலுவலா்கள், மண்டல அலுவலா்கள், முதல் நிலை பொறுப்பாளா் ஆகியோா் விவரம் மற்றும் தொலைபேசி எண்கள், அவசர எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பொது மக்கள் அவசர உதவிகளுக்கு 1077 என்ற எண்ணை 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளலாம்.
தேசிய நெடுஞ்சாலைகளில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொது மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிக அளவில் மழை மற்றும் காற்று இருக்கும்போது தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம். இயற்கை சீற்றத்தை எதிா்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...