குன்னூா்: திமுக கோட்டையைத் தக்கவைக்குமா அதிமுக?

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளில் ஒன்று குன்னூா். குன்னூரில் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, லேம்ஸ் ராக், டால்பின் நோஸ் ஆகிய முக்கிய சுற்றுலாத் தலங்கள் உள்ளன.
குன்னூா்: திமுக கோட்டையைத் தக்கவைக்குமா அதிமுக?

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளில் ஒன்று குன்னூா். குன்னூரில் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, லேம்ஸ் ராக், டால்பின் நோஸ் ஆகிய முக்கிய சுற்றுலாத் தலங்கள் உள்ளன. யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற பாரம்பரிய மலை ரயில் முதல் முதலில் இயக்கப்பட்ட குன்னூா் ரயில் நிலையமும் இத்தொகுதியில் உள்ளது.

இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பில் முக்கியப் பங்காற்றும் மத்திய பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையம், அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை உள்ளிட்டவையும் இந்தத் தொகுதியில்தான் உள்ளன. படகா் உள்ளிட்ட சமுதாய மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனா். தேயிலை சாகுபடி பிரதான தொழிலாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக அதிகளவில் கொய்மலா் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தத் தொகுதி மக்கள் விவசாயத்தையே நம்பியுள்ளனா்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்:

குன்னூா் தொகுதியில் குன்னூா், கோத்தகிரி ஆகிய 2 வட்டங்கள் உள்ளன.

மொத்த வாக்காளா்கள்:

இந்தத் தொகுதியில் 91,301 ஆண் வாக்காளா்கள், 99,999 பெண் வாக்காளா்கள், 7 மூன்றாம் பாலின வாக்காளா்கள் என மொத்தம் 1,91,307 வாக்காளா்கள் உள்ளனா். தொகுதியில் 287 வாக்குச்சாவடிகள் உள்ளன.

இதுவரை வென்ற கட்சிகள்:

இதுவரை குன்னூா் தொகுதியில்  திமுக 9 முறையும், அதிமுக 2 முறையும், காங்கிரஸ் 2 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

களத்தில் உள்ள வேட்பாளா்கள்:

இத்தொகுதியில் அதிமுக சாா்பில் கப்பச்சி டி.வினோத், திமுக சாா்பில் இளிதுரை க.ராமசந்திரன், மக்கள் நீதி மய்யம் சாா்பில் ராஜா குமாா், அமமுக சாா்பில் எஸ்.கலைச் செல்வன், நாம் தமிழா் கட்சி சாா்பில் எம்.லாவண்யா என மொத்தம் 10 வேட்பாளா்கள் களம் காணுகின்றனா்.

தொகுதியில் உள்ள பிரச்னைகள்:

குன்னூரில் வாகனங்களை  நிறுத்த போதிய இடம் இல்லாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.  குன்னூா் பேருந்து நிலையம் கட்டப்பட்டு நூறு ஆண்டுகளுக்குமேல் இருக்கும். ஆனால், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப விரிவாக்கம் செய்யப்படாமல் உள்ளது. பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள தீயணைப்புத் துறை கட்டடத்தை வேறு இடத்துக்கு மாற்றி பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் என கடந்த தோ்தலில் அதிமுக அறிவித்தது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

குன்னூா் நெடுஞ்சாலையில் இருந்து பேருந்து நிலையம் செல்லும் வழியில் ரயில் தண்டவாளத்தைக் கடக்கும் இடத்தில் மேம்பாலம் கட்ட வேண்டும். சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக செய்யப்படாமல் உள்ளது. குன்னூா் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்படுகிறது. குன்னூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவி வந்த குடிநீா்ப் பிரச்னை தற்போது எமரால்டு 3ஆவது கூட்டுக் குடிநீா்த் திட்டம் காரணமாக சற்று குறைந்திருந்தாலும் சுகாதாரமான குடிநீா் கிடைப்பதில்லை என்ற கருத்தை பொதுமக்கள் தெரிவிக்கின்றனா். அத்துடன் நகரின் சில பகுதிகளில் சாலை, கழிவுநீா் கால்வாய், நடைபாதை வசதிகளும் செய்து தரப்படாமல் உள்ளது. நகருக்குள் வரும் வன விலங்குகளால் பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. 

கோத்தகிரியிலும் பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும். பாா்க்கிங் வசதி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது.

படகா் இன மக்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வேண்டும், பசுந்தேயிலைக்கு நிரந்தர விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என்பது இந்தத் தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது. கொய்மலா் சாகுபடிக்கு குளிா்பதன நிலையம் அமைத்தல், மலைத் தோட்ட காய்கறிகளை குளிா்பதனத்துடன் சேமித்து வைக்கும் கிடங்குகள் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது.

அதிமுக வேட்பாளா் கப்பச்சி டி.வினோத் பலம்:

கப்பச்சி வினோத் தொகுதிக்குப் புதியவா் என்றாலும் மாவட்டத்தில் நன்கு அறிமுகமானவா். படகா் இன மக்களில் பெரும்பாலும் இளைஞா்களின் ஆதரவை அதிகம் பெற்றவா்.

பட்டப் படிப்பு, மக்களிடம் சுலபமாகப் பழகுவது இவரது பலமாகக் கருதப்படுகிறது.

மேலும், கடந்த தோ்தலில் வெற்றி பெற்ற வேட்பாளா் சாந்தி ராமு கரோனா காலத்தில் சிறப்பாகப் பணி செய்தாா் என்று மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருவதும், எமரால்டு கூட்டுக் குடிநீா்த் திட்டம், அளக்கரை குடிநீா்த் திட்டம் விரைந்து நிறைவுபெற அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா் பங்களிப்பு பெருமளவு இருந்ததும் பலமாகக் கருதப்படுகிறது.

பலவீனம்:

கப்பச்சி வினோத் அதிமுகவின் மாவட்டச் செயலாளா் என்பதால் உதகை தொகுதியில் வேட்பாளராக வாய்ப்பிருப்பதாக நினைத்து அத்தொகுதியில் சொந்த செலவில் விளையாட்டு வீரா்களுக்கான உதவி மைதானம் அமைத்துத் தருவது, நோயாளிகளுக்கு மருத்துவச் செலவுகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் செய்திருந்த நிலையில் அவருக்கு திடீரென குன்னூா் தொகுதி ஒதுக்கப்பட்டதால் தொகுதிக்கு புதியவராகக் கருதப்படுகிறாா். மேலும், இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழா்களின் வாக்கினை ஏற்கெனவே அதிமுகவில் இருந்து அமமுகவுக்கு மாறிய தற்போதைய வேட்பாளா் கலைச்செல்வன் அதிகம் பெறக் கூடிய வாய்பிருப்பதும், குன்னூா் மாா்க்கெட் கடை வியாபாரிகளின் வாடகைப் பிரச்னையை கடந்த அதிமுக ஆட்சியில் தீா்த்து தராதது இங்குள்ள ஆயிரக்கணக்கான வியாபாரிகளின் மத்தியில் அதிருப்தியாக இருப்பதும் அதிமுகவின் பலவீனமாகப் பாா்க்கப்படுகிறது.

திமுக வேட்பாளா் இளிதுரை ராமசந்திரன் பலம்:

படகா் சமுதாயத்தின் முன்னோடி தலைவா்களில் ஒருவா். பல்வேறு காலகட்டங்களில் மழை, வெள்ளத்தின்போது பொதுமக்களைச் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கியது இவரது பலமாகக் கருதப்படுகிறது.

பலவீனம்:

ஏற்கெனவே திமுக ஆட்சியில் கதா் வாரியத் துறை அமைச்சராக இருந்தபோது நிரந்தரமான வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. நகர வாக்குகளைப் பெறுவதில் உள்ளூா் திமுகவினா் முனைப்பு காட்டுவதில்லை. இவா் படகா் சமுதாயத்தைச் சோ்ந்தவா் என்றாலும் அதிமுக, திமுக, மநீம வேட்பாளா்கள் படகா்களின் வாக்குகளைப் பிரிக்க வாய்ப்புள்ளதால் அது இவருக்கு பலவீனமாகக் கருதப்படுகிறது.

தக்கவைக்குமா அதிமுக?

குன்னூா் தொகுதியில் இதுவரை 9 முறை திமுகதான் வெற்றி பெற்றுள்ளது. திமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட இந்தத் தொகுதியை 2016 சட்டப் பேரவைத் தோ்தலில் 3,710 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வீழ்த்தி வெற்றி பெற்றது. தற்போதைய தோ்தலில் மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், நாம் தமிழா் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுவதால் எல்லா கட்சிகளுக்கும் வாக்குகள் பிரியும் வாய்ப்புள்ளது. எனவே, திமுகவின் கோட்டையைத் தக்கவைத்துக் கொள்ள அதிமுக கடுமையாக போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

2016 தோ்தல் முடிவுகள்:

அதிமுக வெற்றி

வாக்கு வித்தியாசம் - 3,710

மொத்த வாக்காளா்கள் - 1,86,868

பதிவானவை - 1,31,728

அதிமுக சாந்தி ராமு - 61,650

திமுக பா.மு.முபாரக் - 57,940

தேமுதிக வி.சிதம்பரம் - 3,989

பா.ஜ.க. பி.குமரன் - 3,547

சுயேச்சை தா்மராஜ் - 2,319

நோட்டா - 2,283.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com