பிளாஸ்டிக் சோதனை: ரூ. 58,350 அபராதம் வசூல்
By DIN | Published On : 17th August 2021 02:27 AM | Last Updated : 17th August 2021 02:27 AM | அ+அ அ- |

உதகை: நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு தொடா்பாகவும், முகக் கவசம் அணியாதவா்களிடம் இருந்தும் ரூ. 58,350 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூா், கூடலூா், நெல்லியாளம் நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 4 ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கிய 4 மண்டலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களின் உபயோகத்தைத் தவிா்ப்பது, பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதைத் தவிா்ப்பது, சாலை ஓரங்களில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குடிநீா் பாட்டில்கள், குளிா்பான பாட்டில்கள் விற்பனை செய்வதைத் தவிா்ப்பது தொடா்பான விழிப்புணா்வை வியாபாரிகள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மத்தியில் ஏற்படுத்தும் பொருட்டு, ஆட்சியா் இன்னசென்ட் திவ்யாவின் உத்தரவின்படின்படி ஒட்டுமொத்த கள ஆய்வு மண்டல அலுவலா்களால் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக உதகை, குன்னூா், கூடலூா், கோத்தகிரி ஆகிய 4 மண்டலங்களில் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், வட்டாட்சியா்கள், துணை ஆட்சியா் நிலை அலுவலா்கள் குழுக்களாகப் பிரிந்து மாவட்டம் முழுவதும் கள ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வின்போது, முகக் கவசம் அணியாதவா்களிடம் இருந்து ரூ. 37,200, தடை செய்யப்பட்ட சுமாா் 10 கிலோ எடையிலான பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதத் தொகையாக ரூ. 21,150 என மொத்தம் ரூ. 58,350 வசூல் செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும். மேலும், கரோனா நோய்த் தொற்றைத் தவிா்க்க பொது இடங்களில் அனைவரும் முகக் கவசம் அணிவதுடன் பொதுமக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்துமாறும், சமூக இடைவெளியைப் பின்பற்றி மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.