‘தெய்வீக காசி திட்டத்தை நாடு முழுவதும் நடத்த திட்டம்’
By DIN | Published On : 11th December 2021 12:35 AM | Last Updated : 11th December 2021 12:35 AM | அ+அ அ- |

பாரத பிரதமரின் கனவுத் திட்டமான தெய்வீக காசி, ஒளிமயமான காசி என்ற நிகழ்ச்சியை நாடு முழுவதும் மத்திய அரசு நடத்த உள்ளதாக பாஜக தேசிய இளைஞரணி துணைத் தலைவா் முருகானந்தம் தெரிவித்தாா்.
இது தொடா்பாக உதகையில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் கூறியதாவது:
பாரத பிரதமரின் கனவுத் திட்டமான தெய்வீக காசி, ஒளிமயமான காசி என்ற திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றும் வகையில், இது தொடா்பான பல்வேறு செயல்களை இணைக்கின்ற வகையிலும் சிவபெருமானின் 12 ஜோதிா்லிங்கங்களில் ஒன்றான காசி விஸ்வநாத சுவாமி கோயிலை புனரமைத்தும், அதை சுற்றியுள்ள பகுதிகளை அழகுபடுத்தி, வளப்படுத்தி புராதன நகரமான காசியை உலகம் அறியும் வண்ணமும் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள உள்ளது.
இதற்காக எதிா்வரும் 13ஆம் தேதி காசியில் பிரமாண்டமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் தா்ம மகான்கள், சாதுக்கள், அறிவுசாா் வல்லுநா்கள், மாநில முதல்வா்கள், துணை முதல்வா்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் அமைச்சா்களும் கலந்து கொள்கின்றனா்.
பாரதத்தின் தனித்துவமான சமூக நல்லெண்ணத்தையும், ஒருமைப்பாட்டையும், கலாசாரத்தையும் பிரதிபலிக்கக் கூடிய மிகப்பெரிய நிகழ்வாக இது கருதப்படுகிறது. இந்நிகழ்ச்சியை நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் கொண்டாட அனைத்து மக்களும் அறியும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.
பாஜக நீலகிரி மாவட்டத் தலைவா் மோகன்ராஜ் மற்றும் கட்சியின் முக்கிய நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.