உதகையில் அங்கக வேளாண்மை கருத்தரங்கம்

நீலகிரி மாவட்டத்தில் தோட்டக் கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில் மாவட்ட அளவிலான அங்கக வேளாண்மை கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கை தொடங்கிவைத்துப் பாா்வையிட்ட வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா உள்ளிட்டோா்.
கருத்தரங்கை தொடங்கிவைத்துப் பாா்வையிட்ட வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா உள்ளிட்டோா்.

நீலகிரி மாவட்டத்தில் தோட்டக் கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில் மாவட்ட அளவிலான அங்கக வேளாண்மை கருத்தரங்கம் நடைபெற்றது.

ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளா்ச்சி இயக்கத் திட்டத்தின்கீழ், இரண்டு நாள்கள் நடைபெற்ற கருத்தரங்கை வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன், நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா ஆகியோா் புதன்கிழமை துவக்கிவைத்தனா். மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி முன்னிலையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் அமைச்சா் ராமசந்திரன் பேசியதாவது:

இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் விதமாக இந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது.

தமிழக முதல்வா் இயற்கை விவசாயத்துக்கு அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்து முக்கியத்துவம் அளித்து வருகிறாா். இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க இயற்கை வேளாண்மை மேம்பாட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டு மத்திய, மாநில அரசின் பங்களிப்புடன் ரூ. 33.03 கோடி மதிப்பிலும், சிறுதானியங்கள் சாகுபடியை ஊக்குவிக்க சிறுதானிய இயக்கத் திட்டம் ரூ. 12.44 கோடி மதிப்பிலும் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது. இதன் ஒருபகுதியாக கோத்தகிரி பகுதியில் ரூ. 30 லட்சம் மதிப்பில் சிறுதானியங்கள் சுத்தப்படுத்தி சந்தைப்படுத்தும் நிலையம் அமைக்கப்பட உள்ளது.

இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு முதலாம் ஆண்டு ஊக்குவிப்புத் தொகையாக ஹெக்டேருக்கு ரூ. 4,000 வீதம் மற்றும் இரண்டாம் தவணையாக ரூ. 3,000, இயற்கை வேளாண்மை இடுபொருள்கள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இயற்கை விவசாயம் மேற்கொள்வது காலத்தின் கட்டாயமாவதால் வருங்கால சந்ததியைக் கருத்தில் கொண்டு நோய் நொடியின்றி வாழ இயற்கை வேளாண்மை மூலம் அனைத்து உணவுப் பொருள்களையும் உற்பத்தி செய்து இந்த மண்ணையும், மக்களையும் காக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.

நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா பேசியதாவது:

இயற்கை விவசாயத்தை மக்கள் இயக்கமாக கொண்டு வர வேண்டும். மக்கள் இயக்கமாக மாறாதவரை இத்துறையில் வெற்றி பெற முடியாது. இயற்கை விவசாயம் அதிக அளவில் பெருகும்போது ஏழை, எளிய மக்களிடம்போய் சேர என்ன செய்ய வேண்டும் என அரசுக்கு ஆலோசனைகளைத் தெரிவிக்க வேண்டும். மண்ணின் தன்மையை நிலை நிறுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை நடப்பு ஆண்டில் அறிமுகப்படுத்தியுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com