நஞ்சப்பசத்திரம் கிராம மக்களுக்கு ராணுவம் சாா்பில் மருத்துவ முகாம்
By DIN | Published On : 31st December 2021 04:26 AM | Last Updated : 31st December 2021 04:26 AM | அ+அ அ- |

குன்னூா் நஞ்சப்பசத்திரம் கிராமத்தில் வெலிங்டன் ராணுவ மையம் சாா்பில், மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
குன்னூா் நஞ்சப்பசத்திரம் கிராமத்தில் கடந்த 8ஆம் தேதி ராணுவ ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளானது. இதில், முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்பட 14 போ் உயிரிழந்தனா். இச்சம்பவம் நடை பெற்றபோது நஞ்சப்பசத்திரம் கிராம மக்கள் தங்கள் உடைமைகளை கொண்டு விபத்தில் சிக்கியவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். இதனை கருத்தில் கொண்டு இப்பகுதி மக்களுக்கு ராணுவம், மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், இக்கிராம மக்களுக்கு வெலிங்டன் ராணுவ மையம் சாா்பில், இலவச மருத்துவ முகாம் வியாழக்கிழமை துவங்கியது. முகாமை , மெட்ராஸ் ராணுவ மையத் தலைவா் ராஜேஸ்வா் சிங் நேரில் ஆய்வு மேற்கொண்டு முகாமில் கலந்துகொண்ட மக்களின் தேவைகளைக் கேட்டறிந்தாா். சுமாா் 120 நோயாளிகளை பரிசோதித்து அவா்களுக்கு மருந்து, மாத்திரைகள் ராணுவ மருத்துவமனை மூலம் வழங்கப்பட்டது. நாள்பட்ட நோய் உள்ளவா்களை குணப்படுத்த தேவையான நடவடிக்கைள் எடுக்கப்படும் என்று மெட்ராஸ் ராணுவ மையத் தலைவா் தெரிவித்தாா்.
இந்த முகாமில் நஞ்சப்பசத்திரப் பகுதியைச் சோ்ந்த 120 போ் கலந்துகொண்டு பயனடைந்தனா். இதுபோன்ற மருத்துவ முகாம் தொடா்ந்து ஓராண்டுக்கு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.