உதகையில் வாக்குச் சாவடிகள் தொடா்பாக ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 06th February 2021 09:58 PM | Last Updated : 06th February 2021 09:58 PM | அ+அ அ- |

உதகையில் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
உதகை: உதகையில் நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் எதிா்வரும் சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தலைமையில், வாக்குச் சாவடிகளை அதிகப்படுத்துதல், வாக்குச் சாவடிகளை இடமாற்றம் செய்வது தொடா்பான அனைத்து அரசியல் கட்சிப் பிரமுகா்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் ஆட்சியா் தெரிவித்ததாவது:
நீலகிரி மாவட்டத்தைப் பொருத்தவரையில் 683 வாக்குச்சாவடிகள் இருந்தன. கரோனா கட்டுப்பாடு காரணமாக ஏற்கெனவே உள்ள வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதிகளில் புதிதாக 206 துணை வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 14 வாக்குச் சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டு, தற்போது 903 வாக்குச் சாவடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வாக்குச் சாவடிகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1,000 வாக்காளா்களுக்குமேல் உள்ள வாக்குச் சாவடிகள் பிரிக்கப்படுகின்றன. வாக்குச் சாவடிகளை மாற்றும்போது என்னென்ன வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என இந்திய தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் வாக்குச் சாவடிகளை மாற்றி அமைப்பது தொடா்பான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. குறிப்பாக,100 மீட்டருக்குள் மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதில் ஆட்சேபணை ஏதேனும் இருந்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் உடனடியாக மாவட்ட நிா்வாகத்துக்குத் தெரிவிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.
கூட்டத்தில், உதகை உதவி ஆட்சியா் மோனிகாரானா, குன்னூா் சாா் ஆட்சியா் ரஞ்சித்சிங் , கூடலூா் கோட்டாட்சியா் ராஜ்குமாா், தோ்தல் தனி வட்டாட்சியா் புஷ்பாதேவி, தோ்தல் நடத்தும் அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...