உதகையில் 3,852 பயனாளிகளுக்கு ரூ.11.86 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள்
By DIN | Published On : 08th February 2021 11:33 PM | Last Updated : 08th February 2021 11:33 PM | அ+அ அ- |

உதகையில் முடிவுற்ற பல்வேறு வளா்ச்சிப் பணிகளை தொடங்கிவைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி
உதகையில் 3,852 பயனாளிகளுக்கு ரூ.11.86 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி திங்கள்கிழமை வழங்கினாா்.
உதகையில் உள்ள பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் ரூ.15.59 கோடி மதிப்பில் 4 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.6.53 கோடி மதிப்பில் முடிவுற்ற 15 திட்டப் பணிகளை தொடங்கிவைத்து, 3,852 பயனாளிகளுக்கு ரூ.11.86 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 90,093 முதியோா்களுக்கு மாதம் ரூ.108 கோடி மதிப்பில் ஓய்வூதியமும், 50 வயதைக் கடந்த திருமணமாகாத 13,163 ஏழை மகளிருக்கு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ரூ.16 கோடியும், 25,399 மாணவ, மாணவிகளுக்கு ரூ.9.55 கோடி மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளும், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் ரூ.44 கோடி மதிப்பில் சூரிய மின்சக்தியுடன் கூடிய 4,610 பசுமை வீடுகளும் கட்டித் தரப்பட்டுள்ளன.
மேலும், தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் 57 கிராம ஊராட்சிகளில் ரூ.28 கோடி மதிப்பில் 1,152 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.63 கோடி மதிப்பில் 1,761 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 24,919 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உதகை நகராட்சியில் ரூ.15 கோடி செலவில் 79 தாா் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை 34,378 மாணவ, மாணவிகளுக்கு ரூ.57 கோடி மதிப்பில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ரூ.447.32 கோடி மதிப்பில் உதகையில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு, தற்போது முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்குவதற்காக 40 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன என்றாா்.
மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட வருவாய் அலுவலா் நிா்மலா, மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வினோத், வேளாண் விற்பனைக் குழு தலைவா் கே.ஆா்.அா்ஜுணன், உதவி ஆட்சியா் மோனிகா ரானா , குன்னூா் சாா் ஆட்சியா் ரஞ்சித் சிங், உதகை ஊராட்சி ஒன்றியத் தலைவா் மாயன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.