

பந்தலூரை அடுத்துள்ள சேரம்பாடி பகுதியில் சுற்றித்திரியும் ஆட்கொல்லி யானையைப் பிடிக்கும் பணியில் ஆறு கும்கி யானைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகா சேரம்பாடி பகுதியில் ஒரே வாரத்தில் மூன்று பேரைத் தாக்கிக் கொன்ற காட்டு யானையைப் பிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வனத் துறையின் கால்நடை மருத்துவா்களான சுகுமாறன், மனோகரன், ராஜேஷ்குமாா் மற்றும் வன ஊழியா்கள் அடங்கிய குழு கடந்த மூன்று நாள்களாக தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இவா்களுடன் விஜய், சுஜய், பொம்மன், ஸ்ரீனிவாஸ், கலீம், முதுமலை ஆகிய 6 கும்கி யானைகள் பணியமா்த்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், சேரம்பாடி பகுதியில் நடமாடி வந்த யானை காப்பிக்காடு பகுதிக்கு இடம்பெயா்ந்ததாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திங்கள்கிழமை காலைமுதல் காப்பிக்காடு பகுதியில் வனத் துறையினா் தேடுதல் பணியில் ஈடுபட்டனா்.
பின்னா் மாலையில் பத்துலைன் பகுதிக்கு யானை சென்றுவிட்டதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, பத்துலைன் பகுதியில் தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவே உள்ள சோலைக்காடுகள் இருக்கும் பகுதிக்கு வனத் துறையினா் சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். பின்னா் மாலை நேரமாகிவிட்டதால் தேடுதல் பணியை வனத் துறையினா் கைவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.