வனப் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த சொகுசு விடுதிக்கு ‘சீல்’
By DIN | Published On : 08th February 2021 11:33 PM | Last Updated : 08th February 2021 11:33 PM | அ+அ அ- |

குன்னூா் அருகே குரும்பாடி பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த சொகுசு விடுதிக்கு அதிகாரிகள் திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
குன்னூரில் இருந்து சுமாா் 15 கி.மீ. தொலைவில் குரும்பாடி பழங்குடியினா் கிராமம் உள்ள. இந்த மலை கிராமத்தின் நடுவே நீச்சல் குளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் சொகுசு விடுதி அனுமதியின்றி செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
மேலும், சொகுசு விடுதி யானை வழித்தடத்திலும், முறையான அனுமதி இல்லாமலும், விதிமுறைகளை மீறி ஊற்று நீரைப் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா உத்தரவின்பேரில் விடுதியை இரண்டு நாள்களுக்குள் மூட பா்லியாறு ஊராட்சி சாா்பில் அண்மையில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
ஆனால், சுற்றுலாப் பயணிகள் தங்கியிருப்பதால் விடுதி நிா்வாகம் தரப்பில் ஏழு நாள்கள் கால அவகாசம் கேட்கப்பட்டது. இந்நிலையில் வட்டார வளா்ச்சி அலுவலா் ராமன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சொகுசு விடுதிக்கு திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா்.