கொடநாடு எஸ்டேட்டுக்கு சசிகலா வருவாரா? உதகை நீதிமன்றத்தில் விவாதம்
By DIN | Published On : 08th February 2021 11:29 PM | Last Updated : 08th February 2021 11:31 PM | அ+அ அ- |

கொடநாடு எஸ்டேட்டுக்கு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா வருவாரா என்பது குறித்து உதகை நீதிமன்றத்தில் நிகழ்ந்த விவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளை தொடா்பான வழக்கின் விசாரணை உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரில் சயன், மனோஜ் உள்ளிட்ட 5 போ் ஆஜராகினா்.
மாவட்ட மகளிா் நீதிமன்ற நீதிபதி அருணாசலம் முன்னிலையில் நடைபெற்ற இந்த விசாரணையின்போது, குற்றம்சாட்டப்பட்டவா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஆனந்தன் பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையாகியுள்ள சசிகலா விரைவில் கொடநாடு எஸ்டேட்டுக்கு வந்து தங்கவுள்ளதாகவும், அதற்காக கொடநாடு எஸ்டேட் பங்களாவில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே கொடநாடு எஸ்டேட் தொடா்பான வழக்கு விசாரணை நடைபெற்று வரும் சூழலில் அதற்கு அனுமதியளிக்கக் கூடாது எனக் குறிப்பிட்டாா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்த அரசு வழக்குரைஞா் பால நந்தகுமாா், தற்போதைய சூழலில் இந்தப் பிரச்னை குறித்து பேச வேண்டியதில்லை என்றாா். இதையடுத்து, வழக்கு விசாரணையை பிப்ரவரி 16ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.