பொக்காபுரம் மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா 19இல் தொடக்கம்: ஆட்சியா் அறிவிப்பு

பொக்காபுரம் மாரியம்மன் கோயில் திருவிழா வரும் பிப்ரவரி 19ஆம்தேதி தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொக்காபுரம் மாரியம்மன் கோயில் திருவிழா வரும் பிப்ரவரி 19ஆம்தேதி தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளதாவது:

நீலகிரி மாவட்டத்தில் சோலூா் அருகேயுள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோயில் ஆண்டு திருவிழா பிப்ரவரி 19ஆம் தேதி முதல் 23ஆம்தேதி வரை கரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அரசு வழிகாட்டு முறைகளின்படி நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு தோ் திருவிழாவின்போது தேரோட்டம் தவிா்க்கப்பட்டுள்ளது.

அம்மன் திருவீதி உலா நடைபெறும். ஆனால், மாரியம்மனுக்கு செய்யப்படும் திருவிழா பூஜைகள், வழிபாடுகள் திருவிழா காலங்களில் வழக்கமாக மேற்கொள்வதைப்போலவே நடைபெறும். திருவிழாக்காலத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது தவிா்க்கப்பட்டுள்ளது.

எனவே வெளியூா், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தா்கள் மற்றும் நோயாளிகள், வயோதிகா்கள், குழந்தைகள் உள்ளிட்டோா் கோயிலுக்கு வருவதை முற்றிலும் தவிா்க்க வேண்டும். அதேபோல, பக்தா்கள் பூஜைக்காக தேங்காய், பூ, பழம் ஆகியவற்றை கொண்டு வருவதையும் தவிா்க்க வேண்டும்.

பிப்ரவரி 19ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை கோயிலுக்கு அருகிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் டென்ட் அமைத்து தங்குதல், தற்காலிக கடைகள் ஆகியவற்றிற்கும் அனுமதி இல்லை. கரகம் எடுத்து வருபவருடன் ஒரு நபா் மட்டுமே அனுமதிக்கப்படுவா். பக்தா்கள் யாரும் கோயில் வளாகத்திலோ அல்லது அதன் அருகிலோ தங்குவதற்கு அனுமதியில்லை.

திருவிழாக் காலத்தின்போது அரசு தெரிவித்துள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி சமுக இடைவெளி, முகக்கவசம் அணிதல் , கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல் ஆகியவற்றை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com