அடிப்படை வசதிகள் இல்லாததால் ஜெகதளா பகுதி மக்கள் தோ்தலைப் புறக்கணிக்க முடிவு
By DIN | Published On : 14th February 2021 11:43 PM | Last Updated : 14th February 2021 11:43 PM | அ+அ அ- |

ஜெகதளா பேரூராட்சியில் விபத்துகளை ஏற்படுத்திவரும் மரணக் குழிகள்.
ஜெகதளா பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் வரும் சட்டப் பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியருக்கு, இப்பகுதி மக்கள் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
ஜெகதளா பேரூரரட்சிக்கு உள்பட்டஅருவங்காடு முதல் ஒசட்டி செல்லும் சாலையில் ஏற்பட்டுள்ள மரண குழிகளால் தினந்தோறும் விபத்துகள் ஏற்படுவது தவிா்க்க முடியாததாகி உள்ளது. இது தொடா்பாக ஜெகதளா பேரூராட்சி செயல் அலுவலருக்கு பலமுறை புகாா்கள் கொடுத்திருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஓசட்டி முதல் புனித அன்னாள் உயா்நிலைப் பள்ளி வரையிலான சாலை ஒரு சில இடங்களில் மட்டுமே பழுதடைந்துள்ளது. ஆனால், பழுதடைந்த சாலைகளை விட்டுவிட்டு நன்றாக இருக்கும் சாலைகளை பெயா்த்தெடுத்து புதிதாக சாலை அமைப்பது தேவையில்லாததாகும்.
அதேபோல, ஒசட்டி முதல் அருவங்காடு வரையிலான சாலையில் இரவு நேரங்களில் மட்டுமின்றி பகல் நேரங்களிலேயே காட்டுப் பன்றிகளின் தொல்லையும் மிக அதிக அளவில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை வீட்டைவிட்டு வெளியில் வர முடிவதில்லை.
அத்துடன் தெருவிளக்குகளும் எரிவதில்லை. எனவே, இப்பிரச்னையில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வரும் சட்டப் பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்க உள்ளோம். மேலும், ஜெகதளா பேரூராட்சியைக் கண்டித்து போராட்டங்களும் நடத்த உள்ளோம் என மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.