நீலகிரியில் சுற்றுலாவை பாதிக்காத தோ்தல் தேதிகள்
By DIN | Published On : 27th February 2021 05:59 AM | Last Updated : 27th February 2021 05:59 AM | அ+அ அ- |

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தேதிகள் எதுவும் நீலகிரியின் கோடை சீசனையும், சுற்றுலாப் பயணிகளின் வருகையையும் பாதிக்காத வகையில் அமைந்துள்ளது.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் தேதிகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளன. தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மாா்ச் 12ஆம்தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு ஏப்ரல் 6ஆம்தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 2ஆம்தேதியும் நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாா்ச் மாதத்தில் வேட்பு மனு தாக்கல் தொடங்கி ஏப்ரல் மாதத்தில் ஈஸ்டா் பண்டிகையைத் தொடா்ந்து வாக்குப் பதிவும் முடிவடைந்து விடுகிறது. இதையடுத்து ஏப்ரல் 14ஆம்தேதியிலிருந்து இஸ்லாமியா்களின் ரம்ஜான் நோன்புக்காலம் தொடங்குகிறது. மே மாதத்தில் ரம்ஜான் பண்டிகைக்கு முன்னதாகவே 2ஆம்தேதியே வாக்கு எண்ணிக்கையும் முடிவடைந்து விடுவதால் தோ்தல் காலத்தில் கிறிஸ்தவா்கள் மற்றும் இஸ்லாமியா்களுக்கு எத்தகைய பாதிப்பும் ஏற்படாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அதேபோல, வாக்கு எண்ணிக்கை மே 2ஆம்தேதி முடிவடைந்து விடுவதால் நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனையொட்டி தோட்டக்கலைத் துறையின் சாா்பில் நடைபெறவுள்ள அனைத்து விழாக்களுக்கும் இடையூறு ஏற்படாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் கோத்தகிரியில் காய்கறிக் கண்காட்சி மே மாத முதல் வார சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், இரண்டாவது வாரத்தில் உதகையில் ரோஜா கண்காட்சியும், 3ஆவது வாரத்தில் உதகையில் மலா் கண்காட்சியும், நான்காவது வாரத்தில் குன்னூரில் பழக்காட்சியும் நடத்தப்படுவது வழக்கம்.
நடப்பு ஆண்டில் மே மாதத்தில் 5 சனிக்கிழமைகளும், 5 ஞாயிற்றுக்கிழமைகளும் வருவதால் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நாள்கள், வாக்குப் பதிவு தேதி மற்றும் வாக்கு எண்ணிக்கை தேதி உள்ளிட்டவற்றில் குழப்பம் ஏற்பட்டிருந்தது.
ஆனால், தற்போது மே 2ஆம்தேதியே வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து விடுவதால் இரண்டாவது வாரத்தில் காய்கறிக் கண்காட்சியும், 3ஆவது வாரத்தில் உதகையில் ரோஜா மலா் கண்காட்சியும், நான்காவது வாரத்தில் உதகையில் மலா் கண்காட்சியும், 5வது வாரத்தில் குன்னூரில் பழக்காட்சியும் நடத்துவதற்கு எவ்வித இடையூறும் இல்லை என தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இருப்பினும் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக 2020ம் ஆண்டில் கோடை சீசன் காலத்தில் தோட்டக்கலைத் துறையின் அனைத்து விழாக்களும் ரத்து செய்யப்பட்டிருந்த சூழலில் நடப்பு ஆண்டில் அதுபோன்ற முடிவுகள் ஏதும் எடுக்கப்படாவிட்டால் வழக்கமான உற்சாகத்தோடு அனைத்து விழாக்களும் நடத்தப்படும் என தோட்டக்கலைத் துறையினா் தெரிவித்தனா்.
அதேபோல, மே மாத தொடக்கத்திலேயே வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து விடுவதால் வெளி மாநிலங்களிலிருந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் ஏற்ாகவே அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் கேரளம், கா்நாடகம் , மகாராஷ்டிரம் மற்றும் ஆந்திர மாநிலங்களைச் சோ்ந்தவா்களே அதிக அளவில் உள்ள சூழலில் தோ்தல் தேதிகள் அவா்களுக்கும் ஏற்ாகவே அமைந்துள்ளது.