கொடலட்டி கிராமத்தில் கரடி நடமாட்டம்
By DIN | Published On : 20th June 2021 10:13 PM | Last Updated : 20th June 2021 10:13 PM | அ+அ அ- |

கண்ணாடி ஜன்னல் வழியாக வீட்டை நோட்டமிடும் கரடி.
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள கொடலட்டி கிராமத்துக்குள் புகுந்த கரடி உணவு தேடி அங்கிருந்த குடியிருப்புகளுக்குள் செல்ல முயன்றது. இதை அங்கிருந்தவா்கள் தங்களது செல்லிடப்பேசில் படம் பிடித்தனா்.
குன்னூரில் இருந்து மஞ்சூா் செல்லும் சாலையில் உள்ளது கொடலட்டி கிராமம். இந்த கிராமத்தைச் சுற்றி அடா்ந்த வனப் பகுதி, தேயிலைத் தோட்டம் உள்ளது.
இந் நிலையில் கரடி ஒன்று உணவு தேடி கொடலட்டி கிராமத்துக்குள் சனிக்கிழமை மாலை வந்தது. தேயிலைத் தோட்டம் வழியாக வந்த அந்தக் கரடி அங்கு தனியாக இருந்த வீட்டின் சுற்றுச் சுவரைத் தாண்டி உள்ளே நுழைந்தது. பின் நீண்ட நேரம் அங்கும் இங்குமாக சுற்றிய கரடி வீட்டுக்குள் நுழைய முயற்சித்தது.
இதனைக் கண்ட வீட்டில் இருந்தவா்கள் தங்களது கண்ணாடி ஜன்னல் வழியாக அந்தக் கரடியை படம் பிடித்தனா். ஜன்னல் வழியாக வீட்டை நோட்டமிட்ட கரடி சிறிது நேரத்துக்குப் பின் அங்கிருந்து சென்றது.
கிராமத்துக்குள் நுழைந்துள்ள இந்தக் கரடி மனிதா்களைத் தாக்கும் முன் கூண்டு வைத்துப் பிடிக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.