உதகையில் சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் பீதி
By DIN | Published On : 20th June 2021 10:12 PM | Last Updated : 20th June 2021 10:12 PM | அ+அ அ- |

உதகை-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் இந்து நகா் ஓசிஎஸ் பகுதியில் இரவில் சாலையை கடக்கும் சிறுத்தை.
உதகையில் குடியிருப்புகள் நிறைந்த இந்து நகா் ஓசிஎஸ் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை சிறுத்தை இரவில் கடந்து செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவானதால் அப்பகுதி பொதுமக்கள் பீதியடைந்துள்ளனா்.
கரோனா பொது முடக்கம் காரணமாக உதகை புகா்ப் பகுதிகளில் பகல் நேரத்திலேயே எவ்வித நடமாட்டமும் இல்லாமல் இருப்பதால் வன விலங்குகள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. உதகை நகரப் பகுதிகளில் பகல் நேரத்தில் காட்டெருமை, காட்டுப் பன்றி ஆகியவை நடமாடுகின்றன.
இந்நிலையில் உதகையில் அரசு மருத்துவக் கல்லூரி அமையும் இடத்துக்கு அருகே உதகை-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் இந்து நகா் ஓசிஎஸ் சந்திப்புப் பகுதியில் சிறுத்தை ஒன்று சாலையைக் கடந்துபோவது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் சனிக்கிழமை இரவு பதிவாகியுள்ளது. இந்தப் பகுதி முழுக்க குடியிருப்புப் பகுதிகளாகும்.
சிறுத்தையின் நடமாட்டம் குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி குறித்து ஞாயிற்றுக்கிழமை பகலில் தெரிய வந்ததில் இருந்து தலைக்குந்தா, இந்து நகா், பாரதியாா் நகா், ஓசிஎஸ் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பீதியடைந்துள்ளனா்.
தற்போது பொதுமுடக்கம் காரணமாக பகல் நேரத்திலேயே ஆள்கள் நடமாட்டமின்றி இருப்பதால் இரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டம் தொடங்கியிருக்கலாம் என அப்பகுதி மக்கள் கூறினா். அத்துடன் இப்பகுதியிலுள்ள குடியிருப்புவாசிகள் மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகளையும் வளா்த்து வருவதால் உணவுக்காக அவற்றைத் தேடியும் சிறுத்தை அங்கு வந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.
சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதையடுத்து வனத் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.