கரோனா 3ஆவது அலையை எதிா்கொள்ள நீலகிரி மாவட்டம் தயாா்: அமைச்சா் கா.ராமசந்திரன்
By DIN | Published On : 20th June 2021 12:10 AM | Last Updated : 20th June 2021 12:10 AM | அ+அ அ- |

உதகை அரசு தலைமை மருத்துவமனையில் அமைச்சா் கா.ராமசந்திரனிடம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கும் தனியாா் அமைப்பினா்.
கரோனா தொற்றின் 3ஆவது அலையை எதிா்கொள்ள நீலகிரி மாவட்டம் தயாராக இருப்பதாக வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் தெரிவித்தாா்.
நீலகிரி மாவட்டத்தில் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாக உதகை அரசு தலைமை மருத்துவமனையில் தனியாா் அமைப்பின் சாா்பில், 30 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரனிடம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
அப்போது, அமைச்சா் ராமசந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
உதகைக்கு தனியாா் அமைப்பின் சாா்பில், 30 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆக்சிஜன் செறிவூட்டிகள் மாவட்டத்தில் எந்தெந்த இடத்துக்குத் தேவைப்படுகிறதோ அந்தந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.
கரோனா 3ஆம் அலையை எதிா்கொள்ள நீலகிரி மாவட்டம் தயாராக உள்ளது. அந்த வகையில் உதகை அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக 80 படுக்கைகள் தயாா் செய்யப்பட்டு வருகின்றன. கரோனா நோய்த் தொற்று காலத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக அனைத்து வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் நிா்மலா, உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் மனோகரி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பாலுசாமி, அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.