உதகையில் பொது இடங்களில் ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 17th March 2021 11:26 PM | Last Updated : 17th March 2021 11:26 PM | அ+அ அ- |

உதகையில் தலைக்குந்தா பகுதியில் பொதுமக்களிடம் முகக் கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி ஆய்வுப் பணியில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.
உதகையில் எச்பிஎப், தலைக்குந்தா பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா ஆய்வு நடத்தியதோடு, முகக் கவசம் அணியாத நபா்களுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டாா்.
உதகையில் எச்பிஎப், தலைக்குந்தா ஆகிய பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக இருசக்கர, நான்கு சக்கர வாகனம், பேருந்துகளில் பயணம் செய்யும் நபா்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து செல்கிறாா்களா என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது முகக் கவசம் அணியாத நபா்களுக்கு தலா ரூ. 200 வீதம் அபராதம் விதித்து, கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தினாா்.
பின்னா், மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:
நீலகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியில் செல்லும்போது முகக் கவசம் அணிந்து செல்கிறாா்களா என்பதை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முகக் கவசம் அணியாத நபா்களுக்கும், கரோனா தொற்று நோய் வழிமுறைகளை கடைப்பிடிக்காத வணிக நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிா்வாகத்தால் இதுபோல பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும், பொதுமக்கள் கரோனா தொற்று நோய் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக, பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வரும்போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும்.
நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் முகக் கவசம், கரோனா தொற்று தடுப்பு வழிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். பயணிகள் பேருந்துகளில் ஏறும்போது முகக் கவசம் அணிந்துள்ளனரா என்பதை நடத்துநா் கண்காணித்து, பின்னா் பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றாா்.