வாக்கு எண்ணிக்கை: நீலகிரியில் 3 அடுக்கு பாதுகாப்பு
By DIN | Published On : 02nd May 2021 12:00 AM | Last Updated : 02nd May 2021 12:00 AM | அ+அ அ- |

உதகை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்த மாவட்ட தோ்தல் பொது பாா்வையாளா் மெல்வின் வாஸ், ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோா்.
உதகை: தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை, நீலகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு பொது முடக்கக்தின் காரணமாக மாவட்டத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பாண்டியராஜன் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூா், கூடலூா் ஆகிய மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் உதகையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைந்துள்ளது. அங்கு நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு 3 அடுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்புப் பணியில் 775 காவலா்கள் ஈடுபட்டுள்ளனா்.
மேலும் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க மாவட்டத்துக்குள் வரும் வாகனங்கள் அனைத்தையும் வாகன சோதனை செய்த பின்னரே மாவட்டத்துக்குள் அனுமதிக்கின்றனா். இந்நிலையில் கரோனா பரவல் காரணமாக வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் பட்டாசு வெடிக்கவும் ,வெற்றி ஊா்வலங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். இதனை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல, கடந்த ஒரு மாதத்தில் மாவட்டத்தில் கரோனா தடுப்பு விதிமுறைகளான முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற விதிகளை மீறியதாக மாவட்டம் முழுவதும் 13,400 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...