பொதுமுடக்கம்: விளைநிலங்களிலேயே அழுகும் மலைக் காய்கறிகள்
By DIN | Published On : 13th May 2021 06:06 AM | Last Updated : 13th May 2021 06:06 AM | அ+அ அ- |

கரோனா பொது முடக்கம் காரணமாக தோட்ட வேலைக்கு ஆள்கள் கிடைப்பதிலும், விளைநிலங்களிலிருந்து சந்தைக்கு காய்கறிகளை எடுத்து வருவதிலும் ஏற்பட்ட இடையூறு காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பெரும்பலான பகுதிகளில் விளைநிலங்களிலேயே மலைக் காய்கறிகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கரோனா பரவலைத் தடுக்க காரணமாக மே 10 முதல் வரும் 24ஆம் தேதி வரை பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டும் பகல் 12 மணி வரை காய்கறிக் கடைகள், பால் விநியோகம் உள்ளிட்டவை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் விளையும் மலைக் காய்கறிகளான கேரட், முள்ளங்கி, பீட்ரூட் , உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், பிரக்கோலி, பூண்டு, பீன்ஸ் உள்ளிட்டவைகளின் விலை குறைந்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கரோனா தொற்று கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் மலைக் காய்கறிகளை கேரளம், கா்நாடகம், சென்னை, ஈரோடு, திருச்சி, கோயம்புத்தூா் போன்ற சமவெளிப் பகுதிகளுக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் சென்னை கோயம்பேடு மாா்க்கெட்டில் சில்லறை வியாபாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாலும் நீலகிரி மலைக் காய்கறிகளுக்கான வியாபாரம் பெரிதும் சரிந்துள்ளது. நாளொன்றுக்கு இப்பகுதிகளுக்கு குறைந்தபட்சம் 20 டன் மலைக் காய்கறிகள் 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் எடுத்துச் செல்லப்படும். ஆனால் கரோனா அச்சத்தின் காரணமாக காய்கறிகள் மண்டிகளிலும், விவசாய நிலங்களிலும் தேக்கம் அடைந்துள்ளன.
சமவெளிப் பகுதிகளைப் போலவே மலைப் பிரதேசமாக இருக்கும் நீலகிரி மாவட்டத்திலும் 12 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளதால் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. குளிா் பிரதேசம் என்பதால் காலை 10 மணிக்கு கடைகள் திறக்கப்பட்டு பொருள்கள் எடுத்து வைக்கவே நேரம் ஆகி விடுகிறது. அதன்பின் 12 மணிக்கு கடைகள் மூடப்படுகின்றன. இதனால் வியாபாரம் செய்ய முடியாமல் வியாபாரிகள் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றனா்.
நீலகிரியின் சுற்றுப்புற கிராமப் பகுதிகளிலிருந்து காய்கறிகளை நகரப் பகுதிக்கு கொண்டு வந்து இறக்கிவிட்டு, மீண்டும் கிராமப் பகுதிகளுக்கு திரும்பும்போது 12 மணியைத் தாண்டி விடுவதால் வாகன ஓட்டுநா்களும், விவசாயிகளும் காவல் துறையினரின் கட்டுப்பாடுகளுக்கு அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பெரும்பாலான கிராமப் பகுதிகளிலிருந்து நகரப் பகுதிகளிலுள்ள மாா்க்கெட்டிற்கு காய்கறிகள் குறைவாகவே வருகிறது. இதனால் 50 சத வியாபாரம் மட்டுமே நடைபெறுகிறது. கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த கேரட் தற்போது ரூ.15 முதல் ரூ.20 வரையே விற்பனை செய்யப்படுகிறது. பீட்ரூட் ரூ.15 முதல் 20 வரையும், உருளைக்கிழங்கு ரூ.25 முதல் ரூ.35 வரையும், முட்டைக்கோஸ் கிலோ ரூ.10க்கும், மலைப்பூண்டு ரூ.60 முதல் ரூ.70 வரையும், பீன்ஸ் ரூ.20 முதல் 50 வரையும் விற்பனை செய்யப்படுவதால் உற்பத்தி செலவை விட குறைவான விலைக்கே மாா்க்கெட்டில் விற்பனை ஆகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. இதனால் சில விவசாயிகள் விளைநிலங்களில் இருந்து அறுவடை செய்வதை நிறுத்தி வைப்பதால் காய்கறிகள் நிலங்களிலேயே அழுகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாய நிலங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமாா் ரூ.10 கோடி மதிப்பிலான காய்கறிகள் தேக்கமடைந்துள்ளன. இதனை கருத்தில் கொண்டு மலை மாவட்டத்தில் பகல் 2 மணி வரை கடைகளைத் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என மேற்குநாடு விவசாய சங்கத் தலைவா் கடநாடு குமாா் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.