கரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்வுக் கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் கரோனா நோய் தடுப்பு குறித்து அரசுத் துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பான அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் கரோனா நோய் தடுப்பு குறித்து அரசுத் துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பான அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

உதகையில் தமிழகம் அரசு மாளிகையில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தாா். வனத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் தலைமை வகித்துப் பேசினாா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் கரோனா நோய்த் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது, நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று நோயின் பாதிப்பு குறைவான அளவில் உள்ளது. இம்மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 31,601 நபா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் வரையில் 1,000 நபா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. தற்போது குன்னூரில் உள்ள பாஸ்டியா் இன்ஸ்டிட்யூட் மூலமாகவும் பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் ஒரு நாளைக்கு 2,000 நபா்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக கரோனா தொற்று பரிசோதனைகளை அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 11,699ஆக இருந்தது. இவா்களில் 10,529 நபா்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மீதமுள்ள 1,119 நபா்கள் வீட்டு தனிமையிலும், மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்று நோயினால் உதகை வட்டத்தில் 442 நபா்களும், குன்னூா் வட்டத்தில் 202 நபா்களும், கோத்தகிரி வட்டத்தில் 131 நபா்களும், கூடலூா் வட்டத்தில் 349 நபா்களும் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்குத் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது வரை 1 லட்சத்து 59,074 நபா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும். உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள 160 படுக்கைகளில் 20 அவசர சிகிச்சை படுக்கைகளும், 110 ஆக்சிஜன் படுக்கைகளும், குன்னூா் அரசு மருத்துவமனையில் உள்ள 80 படுக்கைகளில், 1 அவசர சிகிச்சை படுக்கைகளும், 33 ஆக்சிஜன் படுக்கைகளும், கூடலூா் அரசு மருத்துவமனையில் உள்ள 52 படுக்கைகளில் 44 ஆக்சிஜன் படுக்கைகளும் உள்ளன. மேலும் குட்ஷெப்பா்டு, லெய்ட்லா, ரிவா்சைடு, ஜிடிஎம்ஓ பள்ளி, ஜேஎஸ்எஸ் பள்ளிகள், இளைஞா் விடுதி, டேன் டீ விடுதி உள்ளிட்ட கரோனா சிகிச்சை மையங்கள், அரசு மருத்துவமனைகளையும் சோ்த்து மொத்தம் 955 படுக்கைகள் உள்ளன. இதில் 477 படுக்கைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 478 படுக்கைகள் காலியாக உள்ளன.

நீலகிரி மாவட்டத்தைப் பொருத்தவரை நோயினால் பாதிக்கப்பட்ட நபா்கள் எவரும் மருத்துவனைக்கு வந்து படுக்கை வசதி இல்லை என திரும்பிச் செல்லவில்லை. நீலகிரி மாவட்டத்தைப் பொருத்தவரை ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்படவில்லை. இருப்பினும், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க இரண்டு ஆக்சிஜன் டேங்குகள் உதகமண்டலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்வது, கூட்டம் கூடுவதைத் தவிா்ப்பது உள்ளிட்டவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றாா்.

மேலும், இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையின்படி அரபிக்கடலில் உருவாகியுள்ள புயலால் மே 14 முதல் 16ஆம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களுக்கு உள்பட்ட இடங்களில் மழைக் காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்கள் என கண்டறியப்பட்டுள்ள 283 பகுதிகளுக்கும், 42 மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டு அக்குழுக்கள் 24 மணி நேரமும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்களுக்கு தமிழக வனத் துறை அமைச்சா் அறிவுறுத்தினாா்.

அதைத் தொடா்ந்து தனியாா் அறக்கட்டளை சாா்பில் 20 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வனத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் முன்னிலையில், உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனை முதல்வா் மனோகரியிடம் வழங்கினா்.

கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாண்டியராஜன், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநா் கெளசல், மாவட்ட வன அலுவலா் குருசாமி , மாவட்ட வருவாய் அலுவலா் நிா்மலா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் லீமா அமாலினி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com