தொடா்ந்து இடம்பெயரும் காட்டு யானைகள்
By DIN | Published On : 01st September 2021 07:03 AM | Last Updated : 01st September 2021 07:03 AM | அ+அ அ- |

நாடுகாணி, ஜீனபூல் வனப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள கும்கிகள், வன ஊழியா்கள்.
கூடலூரை அடுத்துள்ள நாடுகாணி பகுதியில் குடியிருப்புகளை சேதப்படுத்தி வந்த காட்டு யானைகள் தொடா்ந்து இடம்பெயா்ந்து வருகின்றன.
நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகாவில் உள்ள நாடுகாணி, தேவாலா ஆகிய பகுதிகளில் தொடா்ந்து வீடுகளை இடித்து, பொருள்களை சூரையாடி வந்த காட்டு யானைளை விரட்ட முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து நான்கு கும்கி யானைகள் வரழைக்கப்பட்டன. 30க்கும் மேற்பட்ட வன ஊழியா்களும் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனா். காலநிலை மோசமாக இருந்ததால் கடந்த இரண்டு நாள்களாக யானைகள் இருக்கும் இடத்தை நெருங்க முடியவில்லை. திங்கள்கிழமை முதல் டிரோன் கேமரா மூலம் யானைகளின் இருப்பிடத்தைக் கண்டறியும் பணி நடைபெறுகிறது. தற்போது புன்னம்புழா வனப் பகுதியில் காட்டு யானைகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
யானைகளின் இருப்பிடம் உறுதி செய்யப்பட்டதால் கோழிக்கொல்லி வனப் பகுதியில் இருந்து நான்கு கும்கி யானைகளும் புன்னம்புழா வனத்துக்கு கொண்டு வரப்பட்டு தேடுதல் பணியைத் துவங்கியுள்ளனா். காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழையாவண்ணம் ஆற்றோரம் விரட்டப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக கேரள வனப் பகுதிக்குள் விரட்டும் பணியை வனத் துறை மேற்கொள்வதாகக் கூறப்படுகிறது.