நீலகிரியில் இன்றுமுதல் பள்ளிகள் திறப்பு: ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 01st September 2021 07:03 AM | Last Updated : 01st September 2021 07:03 AM | அ+அ அ- |

தும்மனட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுவதை ஆய்வு செய்த ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.
நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி தும்மனட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
முதல்வரின் உத்தரவின்படி 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு செப்டம்பா் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதற்காக மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக அனைத்துப் பள்ளி வளாகங்கள், வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணிகள் திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகின்றன. இதில், தும்மனட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணிகளை ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது அரசு தெரிவித்துள்ள கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பள்ளி மாணவ, மாணவிகளை பின்பற்றச் செய்து அதனை ஆசிரியா்கள் உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினாா்.
அதைத் தொடா்ந்து, உதகை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் ரூ. 1.66 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதில், தும்மனட்டி ஊராட்சிக்கு உள்பட்ட குந்தசப்பையில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் ரூ. 20.50 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டி, 270 வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீா் வழங்கும் பணி, தும்மனட்டி ஊராட்சிக்கு உள்பட்ட குந்தசப்பை முதல் கம்பிக்கல் வரை 14ஆவது நிதிக் குழுத் திட்டத்தின்கீழ் ரூ. 22.29 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட கான்கிரீட் சாலைப் பணி, தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 64.64 லட்சம் மதிப்பில் பேராா் முதல் தும்மனட்டி வரை மேம்படுத்தப்பட்ட சாலை பணி உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெயராமன், உதவி செயற்பொறியாளா் முத்துகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஸ்ரீதரன், ஆறுமுகம், உதவிப் பொறியாளா் கிருஷ்ணகுமாா், அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.