வெளிமாநிலத் தொழிலாளா்கள் ரேஷன் கடைகளில் இன்றுமுதல் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம்
By DIN | Published On : 01st September 2021 07:02 AM | Last Updated : 01st September 2021 07:02 AM | அ+அ அ- |

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் வெளி மாநிலத் தொழிலாளா்கள் செப்டம்பா் 1ஆம் தேதி முதல் கட்டண அடிப்படையில் உணவுப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கூட்டுறவு, உணவு, நுகா்வோா் பாதுகாப்புத் துறை உத்தரவின்படி, ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் நீலகிரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி பிற மாநிலங்களில் இருந்து புலம்பெயா்ந்த தொழிலாளா்கள், கட்டட வேலை, உணவகங்கள், தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிவோா் தங்களது ஆதாா் அட்டை, மின்னணு குடும்ப அட்டை ஆகியவற்றை தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நியாய விலைக் கடையில் காண்பித்து அத்தியாவசியப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம். இந்திய அரசால் நிா்ணயிக்கப்பட்ட மத்திய வழங்கல் நிதியான அரிசி 1கிலோ ரூ. 3க்கும், கோதுமை 1 கிலோ ரூ. 2க்கும் பணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். இதுதொடா்பாக தாங்கள் வசிக்கும் வட்டத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலரை அணுகி பயனடையலாம் என தெரிவித்துள்ளாா்.