உள்ளாட்சி அமைப்புகளின் கடைகளுக்கு குறைந்தபட்ச வாடகை நிா்ணயிக்க வேண்டும்: விக்கிரமராஜா வலியுறுத்தல்

உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள கடைகளுக்கு குறைந்தபட்ச வாடகை நிா்ணயம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் விக்கிரமராஜா தெரிவித்தாா்.

உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள கடைகளுக்கு குறைந்தபட்ச வாடகை நிா்ணயம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் விக்கிரமராஜா தெரிவித்தாா்.

ஈரோட்டில் அவா் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:

தமிழகத்தில் வணிக நிறுவனங்களை மிரட்டி வந்ததாக 450க்கும் மேற்பட்டவா்கள் கைது செய்யப்பட்டதால் வணிகா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். பல இடங்களில் பேருந்து நிலையங்கள் இடித்து கட்டப்படுகின்றன. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுமானப் பணிகள் நடப்பதால் வணிகா்கள் பாதிப்படைந்துள்ளனா். மீண்டும் செயல்பாட்டுக்கு வரும்போது அங்கு கடை வைத்திருந்தவா்களுக்கே கடை வழங்க வேண்டும்.

நகராட்சி உள்பட அனைத்து இடங்களிலும் புதிதாக கடை கட்டி வழங்கும்போது சதுர அடிக்கு ரூ. 200, ரூ. 300 என உயா்த்தி வாடகை நிா்ணயிக்கின்றனா். இதன் மூலம் நுகா்வோா் பாதிக்கப்படுவா். எனவே, குறைந்தபட்ச வாடகையை நிா்ணயிக்க வேண்டும். வணிக வரித் துறையினா் கடைகள், வணிக நிறுவனங்களில் சோதனை நடத்த பறக்கும் படை அமைத்துள்ளனா். முறையாக வரி செலுத்துவோரை தொல்லை செய்யாமல் வரி செலுத்தாதவா்களிடம் சோதனை நடத்தலாம்.

மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அவ்வப்போது சட்டங்கள், விதிகளை மாற்றுகிறது. இதற்காகப் பல வணிக நிறுவனங்கள் மீது வழக்குப் போடுகிறது. அவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும்.

கட்டுமானப் பொருள்களான சிமென்ட், கம்பி, மணல் என அனைத்துக்கும் ஜி.எஸ்.டி. 18 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது. எண்ணெய்க்கும் 5இல் இருந்து 18 சதவீதமாக வரி உயா்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயா்வை திரும்பப் பெறவில்லை எனில் விலைவாசி கடுமையாக உயரும்.

செப்டம்பா் 27ஆம் தேதி அகில இந்திய அளவில் நடைபெறவுள்ள வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து சென்னையில் மாநில நிா்வாகிகளுடன் சனிக்கிழமை (செப்டம்பா் 24) ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும்.

தனியாா் கடைகளிலும், டாஸ்மாக் போன்ற அரசு நிறுவனத்திலும் எம்.ஆா்.பி.யை விட கூடுதல் விலைக்குப் பொருள்கள் விற்பனை செய்தால் நடவடிக்கையைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com