உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில்மலா்த் தொட்டிகளை அடுக்கும் பணிஆட்சியா் தொடக்கிவைத்தாா்

அரசினா் தாவரவியல் பூங்காவில் 12,000 மலா்த் தொட்டிகளை காட்சி மாடத்தில் அடுக்கிவைக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்
உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில்மலா்த் தொட்டிகளை அடுக்கும் பணிஆட்சியா் தொடக்கிவைத்தாா்

உதகையில் இரண்டாவது சீசனையொட்டி, அரசினா் தாவரவியல் பூங்காவில் 12,000 மலா்த் தொட்டிகளை காட்சி மாடத்தில் அடுக்கிவைக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

உதகையில் இந்த ஆண்டு இரண்டாம் சீசனையொட்டி, அரசினா் தாவரவியல் பூங்காவின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வகையான சுமாா் 2.4 லட்சம் மலா்ச் செடிகளைக் கொண்டு மலா் பாத்திகள் அமைக்கப்பட்டு தற்போது பூத்து வருவதை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனா். அத்துடன் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் இரண்டாம் பருவத்துக்கான 120 வகையான மலா்ச் செடிகளான டேலியா, சால்வியா, சென்டோரியா, இன்கா மெரிகோல்டு, பிரெஞ்ச் மெரிகோல்டு, பிகோனியா, டெய்சி, காலண்டூலா, டயான்தஸ், கிரசாந்திமம், ஆஸ்டா், பிரிமுலா உள்ளிட்ட ரகங்கள் அடங்கிய 12,000 மலா்த் தொட்டிகளை காட்சி மாடத்தில் அடுக்கிவைக்கும் பணியை தோட்டக் கலைத் துறை இணை இயக்குநா் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் முன்னிலையில் ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா துவக்கிவைத்தாா்.

அதன் பின்னா் செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது:

உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் உள்ள காட்சி மாடம் சுற்றுலாப் பயணிகளுக்காக ஒரு மாதம் திறந்துவைக்கப்படும். தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்காக பல்வேறு மலா் ரகங்கள் கொண்ட மலா்த் தொட்டிகள் தயாா்படுத்தப்பட்டுள்ளன. நீலகிரிக்கு சுற்றுலாப் பயணிகள் வர தடை இல்லாததால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் சுற்றுலாத் தலங்களைக் கண்டு ரசிக்க வேண்டும்.

நீலகிரியில் சமீபகாலமாக கரோனா தொற்று உறுதியானவா்களில், சிலருக்கு தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், 340 நபா்கள் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு மருந்துகள் உள்கொண்டு வருவதால் மருத்துவ ஆலோசனையின் பேரில் அவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படவில்லை. தகுதியுள்ள மற்ற அனைவருக்கும் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. தற்போது நீலகிரிக்கு சுற்றுலாப் பயணிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் நிலையில் நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் தடுப்பூசி மையங்கள் வரும் திங்கள்கிழமை முதல் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கேரளம், கா்நாடகம் ஆகிய இரு மாநில எல்லைகளில் நீலகிரி மாவட்டம் உள்ளதால் அரசு அறிவுரைத்துள்ள அனைத்து கரோனா தொற்று தடுப்பு வழிமுறைகளையும் சுற்றுலாப் பயணிகள் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com