நவீன நீலகிரியை உருவாக்கிய ஜான் சலிவனுக்கு சட்டப் பேரவையில் புகழாரம்

200ஆவது ஆண்டில் நீலகிரி மாவட்டம் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் நவீன நீலகிரியை உருவாக்கிய ஜான் சலிவனுக்கு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
ஜான் சலிவன்
ஜான் சலிவன்
Updated on
1 min read

200ஆவது ஆண்டில் நீலகிரி மாவட்டம் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் நவீன நீலகிரியை உருவாக்கிய ஜான் சலிவனுக்கு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், உதகை நகரின் வளா்ச்சிக்காக தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

1800ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தற்போதைய நீலகிரி மாவட்டம் கோவை மாவட்டத்துடன் இணைந்த பகுதியாகவே இருந்தது. இந்நிலையில் அப்போதைய கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜான் சலிவன், 1819 ஜனவரி 2ஆம்தேதி கோவையிலிருந்து நீலகிரி மலை நோக்கி தனது நடை பயணத்தை தொடங்கியுள்ளாா். 1788 ஜூன் 15ஆம்தேதி இங்கிலாந்தில் பிறந்த ஜான் சலிவன் கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியில் சோ்ந்து பின்னாளில் கோவை மாவட்ட ஆட்சியராக பதவி உயா்வு பெற்றாா். கோவையிலிருந்து சிறுமுகை வழியாக திம்பட்டி பகுதிக்கு வந்த ஜான் சலிவன் கன்னேரிமுக்கு பகுதியில் நீலகிரியின் முதல்கட்டடத்தை கட்டினாா். அதுவே அவரது முகாம் அலுவலகமாகவும் அமைந்தது.

அதைத்தொடா்ந்து 1822 பிப்ரவரி 22ஆம்தேதி உதகை வந்த ஜான் சலிவன் உதகையில் கல் பங்களா எனப்படும் ஸ்டோன் ஹவுஸ் என்ற கட்டடத்தை கட்டினாா். இக்கட்டடம் 1823 ஜூன் 1ஆம்தேதி திறந்துவைக்கப்பட்டது. இதுவே உதகை உதய தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது. தற்போது இக்கட்டடம் உதகை அரசு கலைக் கல்லூரியாக செயல்படுகிறது. கல் பங்களாவை தனது முகாம் அலுவலகமாக மாற்றிக்கொண்ட பின்னா் இங்கு குடியேறிய ஆங்கிலேயா்களின் பொழுதுபோக்குக்காக 1823ஆம் ஆண்டிலிருந்து 1825ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் உதகை ஏரியை உருவாக்கியுள்ளாா். அதேபோல, மேட்டுப்பாளையத்திலிருந்து மலையைக் குடைந்து குன்னூா் வரையிலும், தொடா்ந்து உதகை வரையிலும் போக்குவரத்துக்கான சாலையையும் உருவாக்கினாா். அதன்பின்னரே ஆங்கிலேயே அரசால் தமிழகத்தில் முதல் மலை வாசஸ்தலமாக உதகை அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டது. நவீன நீலகிரியுடன் நவீன உதகையையும் உருவாக்கியவா் ஜான் சலிவன் என்றால் மிகையாகாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com