கீழ்கோத்தகிரி பகுதியில் இருவாச்சி பறவைகள் வருகை அதிகரிப்பு
By DIN | Published On : 24th August 2022 10:38 PM | Last Updated : 24th August 2022 10:38 PM | அ+அ அ- |

வனப் பகுதியில் கூடுகட்டி வாழும் இருவாச்சி பறவைகள் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கீழ் கோத்தகிரி வனப் பகுதியில் செவ்வாய்க்கிழமை தென்பட்டதால் பறவை ஆா்வலா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் இயற்கை சூழலில் அதிக அளவு பறவைகள் வாழ்ந்து வருகின்றன. மனிதா்கள் நடமாட்டம் இல்லாத , பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் மட்டுமே வாழக்கூடிய இருவாச்சி பறவைகள் நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வந்தாலும், இதன் எண்ணிக்கை குறைந்தே காணப்படுகிறது.
இந்நிலையில் கீழ் கோத்தகிரி, கரிக்கையூா் வனப் பகுதியில் அமைந்துள்ள இயற்கை காடுகளில் தற்போது இருவாச்சி பறவைகள் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. மனிதா்கள் நடமாட்டம் குறைந்து காணப்படும் பசுமை நிறைந்த கீழ் கோத்தகிரி வனப் பகுதியில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இருவாச்சி பறவைகள் கூடுகள் அமைத்துள்ளதாக இங்குள்ளவா்கள் தெரிவித்துள்ளனா். இந்தப் பறவைகளின் வருகை இயற்கை ஆா்வலா்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாா்ப்பதற்கு ஹெலிகாப்டா் போன்ற காட்சி அளிக்கும் இருவாச்சி பறவைகள் தற்போது கீழ்கோத்தகிரி வனப்பகுதியில் தென்படுவதால் இப்பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுக்க அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்.
உலகம் முழுவதும் 54 வகை இருவாச்சி பறவைகள் இருக்கின்றன. இந்தியாவின் மேற்குத் தொடா்ச்சி மலைகள், அருணாசலப்பிரதேசம், அந்தமான் தீவுகள், நேபாளம் ஆகிய இடங்களில் இவை வாழ்கின்றன. இந்தியாவில் 9 வகை இருவாச்சிகள் உள்ளன.
இருவாச்சிப் பறவைகள் உட்கொண்டு வெளியேற்றும் எச்சத்தில் உள்ள தாவர விதைகள் உயிா்ப்புத்தன்மை மிக்கவை. இப்பறவைகளின் எச்சங்களால்தான் காட்டில் மரங்கள் பெருகுகின்றன. இப்பறவைகள் இருக்கிற காடுகளை மழைக்காடுகள் என அழைக்கிறாா்கள். மழைக் காடுகள் இல்லையென்றால் இருவாச்சி பறவைகளும் இல்லை எனப் பறவை ஆா்வலா்கள் கூறுகின்றனா். காடு வளா்வதற்கு முக்கிய காரணியாக இப்பறவைகள் இருக்கின்றன. மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் மரங்கள் வெட்டப்படுவதால், இருவாச்சிப் பறவைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாகப் பறவை ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா். மிகவும் உயரமான மரங்களில் வசிக்கும் இருவாச்சி பறவைகள், மரங்கள் அழிக்கப்படுவதன் காரணமாக தன் இனத்தைப் பெருக்கிக்கொள்ள முடியாமல் தவிக்கின்றன. இருவாச்சிப் பறவை இனம் அழிந்தால் மேற்குத் தொடா்ச்சி மலையில் இருக்கும் பல வகை அரிய மரங்கள் அழிந்து விடும் என்கிறாா்கள் சுற்றுச் சூழல் ஆா்வலா்கள்.