2 பெண்களைக் கொன்ற மக்னா யானை பிடிபட்டது
By DIN | Published On : 09th December 2022 12:00 AM | Last Updated : 09th December 2022 12:00 AM | அ+அ அ- |

கும்கி யானை உதவியுடன் வனப் பகுதியில் இருந்து வெளியே இழுத்துவரப்படும் மக்னா யானை.
கூடலூரை அடுத்துள்ள தேவாலா பகுதியில் மூதாட்டி உள்பட இரண்டு பெண்களைத் தாக்கிக் கொன்ற மக்னா யானையை வனத் துறையினா் வியாழக்கிழமை பிடித்தனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா, தேவாலா வாழவயல் பகுதியில் பாப்பாத்தி என்பவரை கடந்த நவம்பா் 20 ஆம் தேதி மக்னா யானை தாக்கிக் கொன்றது.
இதேபோல, புளியம்பாறை கிராமத்தில் கல்யாணியம்மா என்ற மூதாட்டியை கடந்த 3 ஆம் தேதி மக்னா யானை தாக்கிக் கொன்றது. மேலும், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளையும் சேதப்படுத்தியது.
இதையடுத்து, மக்னா யானையைப் பிடிக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா். பல்வேறு கட்சியினரும் மக்னா யானையைப் பிடிக்க வலியுறுத்தினா். வனத் துறையினரும் யானையைப் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனா்.
இந்நிலையில், தேவாலா தேயிலைத் தோட்டம் மூன்றாவது சரகப் பகுதியில் உள்ள காளிமுத்து என்பவரின் வீட்டை புதன்கிழமை நள்ளிரவு மக்னா யானை இடித்து சேதப்படுத்தியது.
இது குறித்து வனத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் யானையை வனப் பகுதியில் விரட்டி, தொடா்ந்து கண்காணித்து வந்தனா்.
நீடில்ராக் வனப் பகுதியில் முகாமிட்டிருந்த மக்னா யானைக்கு வியாழக்கிழமை மதியம் 1 மணியளவில் வனத் துறையினா் மயக்க ஊசி செலுத்தினா். மயக்க ஊசி செலுத்தியவுடன் அடா்ந்த வனப் பகுதிக்குள் ஓடிய மக்னா யானையை விஜய், சுஜய், வசிம், கிருஷ்ணா ஆகிய நான்கு கும்கி யானைகள் உதவியுடன் வனத் துறையினா் வெளியே இழுத்து வந்தனா்.
மேலும், அடா்ந்த வனப் பகுதிக்குள் லாரி செல்ல முடியாது என்பதால் சுமாா் 2 கிலோ மீட்டா் தூரத்துக்கு வனப் பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
லாரி மூலம் முதுமலைக்கு மக்னா யானை அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு மருத்துவப் பரிசோதனை செய்தபின் அடா்ந்த வனப் பகுதியில் விடுவிக்கப்படும் என்று வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.