உதகை படகு இல்லத்தில் சாகச விளையாட்டுகள்:பணிகளை அமைச்சா் தொடக்கி வைத்தாா்
By DIN | Published On : 13th December 2022 12:00 AM | Last Updated : 13th December 2022 12:00 AM | அ+அ அ- |

உதகை படகு இல்லத்தில் சாகச விளையாட்டுகள் தொடங்குவதற்கான பணியை பூமிபூஜை செய்து தொடக்கிவைக்கிறாா் சுற்றுலாத் துறை அமைச்சா் மதிவேந்தன். உடன் வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் உள்ளிட்டோா்.
உதகை படகு இல்லத்தில் சாகச விளையாட்டு தொடங்குவதற்கான பூமிபூஜைய சுற்றுலாத் துறை அமைச்சா் மதிவேந்தன் திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா்.
நீலகிரி மாவட்டத்துக்கு வெளிநாடு சுற்றுலாப் பயணிகள் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் வருகின்றனா்.
இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் உதகை படகு இல்லத்தில் சாகச விளையாட்டுகளைத் துவக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான பணிகளுக்கான பூமிபூஜையை அமைச்சா் மதிவேந்தன் துவக்கிவைத்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வெளிநாடுகளைபோல தமிழகத்திலும் சுற்றுலாப் பயணிகளை கவர சாகச விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்காக தமிழகத்தில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் சாகச விளையாட்டுகள் தொடங்கப்பட உள்ளன. அதன்படி உதகை, கொல்லிமலை, ஜவ்வாது மலை, ஏலகிரி உள்ளிட்ட இடங்களில் ஈகே கேம்பிங் என்ற டென்ட்களில் தங்கி, இயற்கை காட்சிகளை ரசிக்கும் வகையில் ரூ.3 கோடி செலவில் இவை அமைக்கப்பட உள்ளன. தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களின் சாலைகள் சீரமைக்கப்படும் என்றாா்.